பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


88


சிந்தையற நில்லென்று சும்மா இருத்திமேல்
    சின்மயா னந்தவெள்ளந்
  தேக்கித் திளைத்துநான் அதுவா யிருக்கநீ
    செய்சித்ர மிகநன்றுகாண்
எந்தைவட வாற்பரம குருவாழ்க வாழஅரு
    ளியநந்தி மரபுவாழ்க
  என்றடியர் மனமகிழ வேதாக மத்துணி
    பிரண்டில்லை யொன்றென்னவே
வந்தகுரு வேவீறு சிவஞான சித்திநெறி
    மௌனோப தேசகுருவே
  மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
    மரபில்வரு மௌனகுருவே.
     (பொ - ள்) "ஐந்துவகை . . . வெள்ளம்" - ஐந்துவகையாகிய பூதங்கள் முதலாக (முதல் ஒலி எனப்படும்) நாதம் ஈறாகவுள்ள முப்பத்தாறு மெய்களும் (இத்தன்மைத்தென) வெளிப்படையாக உண்மை விளங்குமாறு விளக்கி (புலம்புநிலையில் ஆணவ மறைப்பால் ஏற்பட்ட) அறியாமையும். (புணர்வு நிலையில் கருவி கரணங்களால் ஏற்படும்) சுட்டறிவும் (திருவருளால் தமக்கு) வேறு எனக் கண்டறிய வல்லார், அறிவுருவாக நின்றநிலையின்கண் (புறப்பொருளில் பற்றும்) மனம் அஃதொழிந்து (பற்றற்றான் பற்றைப்பற்றி) அகம் அடங்கி நிற்பாயாகவென்று, வாளா இருக்கும்படி செய்ய, அதன்மேலும் மூதறிவுவண்ணப் பேரின்பப் பெருவெள்ளத்தில்;

    "தேக்கித் . . . வாழ்க" - (திருவருளால்) நிறையநுகர்ந்து அடியேன் அம் மெய்ப்பொருளி லடங்கி அதுவாகவே இருக்கும்படி, நீ செய்தருளிய வியத்தகு அருளிப்பாடு மிகமிகச் சொல்லரிய நன்மையாகும். எம் தந்தையாகிய, கல்லால நீழற்கீழ் எழுந்தருளிய பெரும் பேராசிரியர் வாழ்க. அங்ஙனம் வாழும்படி அருள்புரிந்த நந்திஎம் பெருமான் நன்மரபு வாழ்க;

    "என்றடியர் . . . குருவே" - என்று மெய்யன்பர்கள் மனம் மகிழும்படியாக, மறைமுறைகளின் துணிபு (முதல்வன்) இரண்டாயிருக்கவில்லை, ஒன்றென்று அருளிச் செய்தற்காகவே எழுந்தருளிவந்த ஆசிரியப் பெருந்தகையே! (எல்லா மெய்ந்நூல்களினும் நனிமிக மேலான) சிவஞானசித்தி என்று சொல்லப்படுகின்ற தனித்தமிழ் ஆகம மெய்ந்நூலிலுள்ள, நன்னெறிப்படியே சொல்லாமற் சொல்லலெனும் வாய்வாளா முறைமையினால் செவியறிவுறுத்தருளவந்த சிவகுருவே!

        "மந்த்ர . . . குருவே"

     (வி - ம்) பூதம் - தோற்றமுடையது; பெரியது. நாதம் - ஒலி. வெளியாக - வெளிப்படையாக. சின்மயம் - அறிவுவண்ணம். சித்ரம் - வியப்பு; அதிசயம்.