பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

245
ஐவ ரென்றபுல வேடர் கொட்டம
    தடங்க மர்க்கடவன் முட்டியாய்
  அடவி நின்றுமலை யருகில் நின்றுசரு
    காதி தின்றுபனி வெயிலினால்
மெய்வ ருந்துதவ மில்லைநற் சரியை
    கிரியை யோகமெனும் மூன்றதாய்
  மேவு கின்றசவு பான நன்னெறி
    விரும்ப வில்லையுல கத்திலே
பொய்மு டங்குதொழில் யாத தற்குநல
    சார தித்தொழில் நடத்திடும்
  புத்தி யூகமறி வற்ற மூகமிவை
    பொருளெ னக்கருதும் மருளன்யான்
தெய்வ நல்லருள் படைத்த அன்பரொடு
    சேர வுங்கருணை கூர்வையோ
  தெரிவ தற்கரிய பிரம மேஅமல
    சிற்சு கோதய விலாசமே.
     (பொ - ள்) "ஐவ . . . தவமில்லை" - ஐவரென்று சொல்லப்படுகின்ற பொறிகளாகிய கொடிய வேடர்களுடைய பொல்லாங்குகள் முற்றும் அற்று ஒழியக் குரங்குப்பிடியாய் (எவ்வகைத் துன்பத்தினும் விட்டுவிடாமல்) கடுங்காட்டில் தங்கியும், பெரியமலையின் அண்மையிலிருந்தும், சருகுமுதலிய (சமைக்கப்படாத இயற்கையான எளிய) உணவுகளை (கடும்பசி வந்தபோது) உண்டு (மிக்க கொடிய) பனியினாலும் வெயிலினாலும் உடல் வருந்துவதற்கு ஏதுவாகிய (பயன் தந்து நீங்கும்) தவத்தினை அடியேன் செய்தலும் இல்லை;

     "நற்சரியை . . . விரும்பவில்லை" - (வழி வழியாய் மேலுற நடத்திச் சென்று விழுப்பயன் பெறுவிக்கும் நற்றவமாகிய) நல்ல சீலமும் நோன்பும், செறிவும் எனப்படும் மூன்றதாகப் பொருந்திய ஏணிப்படிகளாகிய நன்னெறிகளை அடியேன் காதல் கொள்ளவுமில்லை;

     "உலகத்திலே . . . கூர்வையோ" - இவ்வுலகின்கண் (கொடிய பிறப்பிற்கு வாயிலாகிய பொறுக்கமுடியாத) பெருங் குற்றங்கள் நிறைந்துள்ள தொழில்கள் யாவையோ அவற்றிற்குத் தேரோட்டும் வலவ (சாரதி)னாய் முன்னின்று செலுத்தும் இறுப்பு மெய்யாகிய புத்தியும், தீயசூழ்ச்சியும், அறிவு சிறிது மில்லாத பித்துத் தன்மையும் ஆகிய இவற்றை (இன்பந்தரும் நிலையான) மெய்ப்பொருள்களென்று நினைக்கின்ற அறிவுமயக்கத்தையுடைய எளியேன் யான், நின் தெய்வத்தன்மை பொருந்திய நல்ல திருவருள் பெற்றுள்ள காதல் மிகுந்த மெய்யடியார்களுடன் விட்டு நீங்காது ஒட்டிப்பொருந்திச் சேர்ந்துறையவும் தண்ணளி புரிந்தருள்வையோ?