பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

265
ஆதியந்தம் எனும்எழுவா யீறற் றோங்கி
    அருமறைஇன் னமுங்காணா தரற்ற நானா
பேதமதங் களுமலைய மலைபோல் வந்தப்
    பெற்றியரும் வாய்வாதப் பேய ராகச்
சாதகமோ னத்திலென்ன வடவால் நீழல்
    தண்ணகுட்சந் திரமௌலி தடக்கைக் கேற்க
வேதகசின் மாத்திரமா யெம்ம னோர்க்கும்
    வெளியாக வந்தவொன்றே விமல வாழ்வே.
     (பொ - ள்) "ஆதியந்த . . . பெயராக" - அடிமுடியுமென்று சொல்லப்படும் தோற்றமும் இறுதியும் இல்லாமல் (ஈடும் எடுப்புமின்றி எழில் பெற்று) ஓங்கி, அருமையான மறைகள் இன்னமுங் காணாது அரற்றுதல் செய்ய, பலவகை வேறுபாடுகளுடன் கூடிய மதங்களும் ஒன்றோடொன்று பிணங்கிப் போர் செய்ய இளைத்து ஒய்தலில்லாமல் வீண் வழக்காடும் தன்மையரும் சொல் வழக்காடும் பேயராக ஒழிய;

     "சாதக . . . வாழ்வே" - (திருவடிப் பேற்றினுக்குரிய மெய்யான வருவகைகள் எனப்படும் சாதகங்களுள் பேசா நிலையாகிய மோனமுமொன்று. பேராலமரத்தின்கீழ், குளிர்ந்த பேரருளோடு கூடிய பிறைமுடிப் பெருமானே! பெருந்திருக்கை யடையாளமாகிய அறிவுக்குறி (முத்திரை)யளவாய் வேறுபடுத்திக் காட்டும் பெற்றியமைந்த முறைமையினால் அடியேங்கட்கு வெளியாக வந்தருளிய (ஒப்பில்லாத விழுமிய) முழுமுதலே, இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியருளிய (வாழ்வற வாழ்வித்த வளமார்) பெருவாழ்வே!

     (வி - ம்.) சாதகம் - துணை. சந்திரமௌலி - பிறைமுடிக்கடவுள் சின்மாத்திரம் - அறிவுக்குறி;

     மறைகள் காணாது மயங்கும் உண்மையினை வருமாறு காண்க :

"மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
 ஐயா எனஒங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே"
- 8. சிவபுராணம்.
'மறையினால் . . . அன்றே' (பக்கம் 243.)
"சுணங்குநின் றார்கொங்கை யாளுமை சூடின தூமலரால்
 வணங்கிநின் றும்பர்கள் வாழ்த்தினமன்னு மறைகடம் மில்
 பிணங்கிநின் றின்னை வென்றறி யாதன பேய்க்கணத்தோ
 டிணங்கிநின் றாடின இன்னம்ப ரான்றன் இணையடியே."
- 4. 100 - 9