பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

305
     (வி - ம்.) சாருவாகன் என்று சொல்லப்படுவோன் உலகாயதக் கொள்கையினருள் ஒரு பிரிவினன். உலகாயதன் உயிருங் கடவுளும் இருவினையும் இல்லையெனவும் பூதங்கள் நான்கே உண்டெனவும் மகளிரின்பமே வீடுபேறெனவும் கூறுபவன். இவ்வுண்மை வருமாறு:

"ஊடுவ துணர்வ துற்ற கலவிமங் கையரை யுள்கி
 வாடுவ தடியில் வீழ்ந்து வருந்துவ தருந்த வம்பின்
 கூடுவ துணர்வு கெட்டுக் குணமெலாம் வேட்கை யேயாய்
 நீடுவ தின்ப முத்தி யித்தில்நின் றார்கள் முத்தர்."
- சிவஞானசித்தியார், பரபக்கம். 31
(9)
 
அந்தணர் நால்வர் காண அருட்குரு வாகி வந்த
எந்தையே எல்லாந் தானென் றியம்பினன் எமைப்ப டைத்த
தந்தைநீ எம்மைக் காக்குந் தலைவனே நுந்தை யன்றோ
பந்தமில் சித்தி முத்தி படைக்கநின் அருள்பா லிப்பாய்.
     (பொ - ள்) "அந்தணர் . . . இயம்பினன்" - (சிவன்திருவருள் வழிநின்று அடிமையுணர்வுடன் எவ்வுயிர்க்கும் அன்புபூண்டு ஒழுகும்) அந்தணராகிய சனகர், சனற்குமாரர், சனந்தனர், சனாதனர் என்னும் நால்வரும் கண்டுகளிக்கும்படி திருவருட் குருவாகத் திருமேனி கொண்டு தோன்றியருளிய எந்தையே (உடைமையாகிய மாயாகாரியப் பொருளுடனும், அடிமையாகிய ஆருயிர்களுடனும் கலப்பினால் ஒன்றாயிருத்தலின்) எல்லாந்தானென இயம்பியருளினன்.

     "எமைப் . . . பாலிப்பாய்" - (ஆருயிர்களை இருவினைக்கீடாக மாயா காரிய உடலுடனும், உலகத்துடனும் பொருத்துவதாகிய செயலினால் எல்லாந்தானாய்) எம்மைப் படைத்தருளிய தந்தையும் நீயே; எம்மைக் காத்தருளுந் தலைவனே, படைக்குந் தொழிலுடைய நான்முகனுக்குத் தந்தைமுறையானவனன்றோ, (மீண்டும் மீண்டும் பிறப்பினைத்தரும் பேறுகள் பிணிப்புடையனவாகும்) பிணிப்பில்லாத வழிப்பேறும் அதற்கு மேலுள்ள முழுப்பேறும் பெற்று வாழ்வதற்குத் திருவருள் சுரந்தளிப்பாயாக.

     (வி - ம்.) சித்தி - வழிப்பேறு. முத்தி - முழுப்பேறு. பந்தமுள்ள சித்தியென்றது அட்டமாசித்தி முதலியவற்றை, அவை மீட்டும் பிறப்பைத்தரும் பெற்றியன. சித்தி - இம்மைப்பயனாகும். முத்தி - வீட்டுப்பயனாகும். அந்தணாளர் நால்வர்க்கும் செவியறிவுறுத்தருளியது செந்தமிழ்ச் சிவஞானபோதமென்ப.

(10)