உள்ளத்து நீ பொருந்தி இருத்தலால், எளியேனைப் பிணித்திருந்த ஆணவ வல்லிருள் அனைத்தும், அறிய வொண்ணாதவாறு எங்கோ சென்று ஒளிந்து கொண்டதே.
(68)
எங்கு மென்னை இகலுற வாட்டியே | பங்கஞ் செய்த பழவினை பற்றற்றால் | அங்க ணாவுன் னடியிணை யன்றியே | தங்க வேறிட முண்டோ சகத்திலே. |
(பொ - ள்) எப்பிறப்பிலும் எவ்விடத்திலும் என்னை விடாது தொடர்ந்து கொடிய பகைவரைப் போன்று துன்புறுத்திக் கீழ்மையாக்கிய பழவினையின் தொடர்பு நின்திருவருளால் அறப் பெற்றால், பேரருட்கண் வாய்ந்த பெருமானே! நின் திருவடியிணையல்லாமல் புகலாய்த் தங்கியுறைவதற்கு இவ்வுலகத்தின்கண் வேறிடமுண்டோ? (இல்லையென்றபடி) இவ் வுண்மை வருமாறு :
மேற்கோள் "இனி இவ்வான்மாத் தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே தமது முதல் சீபாதத்தையணையு மென்றது."
ஏது: "ஊசல் கயிறற்றால் தாய்தரையேயாந் துணையான்."
|
- சிவஞானபோதம், 8. 4. |
(69)
உண்ட வர்க்கன்றி உட்பசி ஓயுமோ | கண்ட வர்க்கன்றிக் காதல் அடங்குமோ | தொண்ட ருக்கெளி யானென்று தோன்றுவான் | வண்த மிழ்க்கிசை வாக மதிக்கவே. |
(பொ - ள்) மிக்கபசி வேட்கையுடையார்க்கு அறுசுவை உண்டியினை உண்டாலன்றோ பசியடங்கும்; அதுபோல் ஒரு பொருளைக் காணுதல் வேண்டு மென்னும் பெருங்காதல் கொண்டவர்க்கு அப் பொருளினை நேரே கண்டாலன்றி அக் காதல் அடங்காது. "வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்" களாகிய நால்வர் முதலாயினார் நற்றமிழ்த்திருமாமறைகளில் நீங்காப் பெருங்காதல் கொண்டு வழிநிற்கும் சிவபெருமான் அத் தொண்டர்கட்கு எளியானாகத் தோன்றித் தலையளி செய்வன்; வளப்பமிக்க செந்தமிழ்த்திருப்பாட்டுக்குப் பொருத்தமுற யாவரும் மதித்தற் பொருட்டு. தலையளி - பெருங்கருணை.
(70)
மதியுங் கங்கையுங் கொன்றையும் மத்தமும் | பொதியுஞ் சென்னிப் புனிதரின் பொன்னடிக் | கதியை விட்டிருந்தக் காமத்தில் ஆழ்ந்தஎன் | விதியை எண்ணி விழிதுயி லாதன்றே. |
(பொ - ள்) (ஆருயிரின் குறைமதியின் அடையாளமாகிய) மதியும், வான்புனலாகிய கங்கையும், கொன்றை மலர்மாலையும்,