ஊமத்தமும் பொதிந்திருக்கின்ற திருச்சடையினையுடைய தூய பொன்போலும் திருவடிப் பேறாகிய அழியாநிலையினை எய்தாமல் (முக்குற்றங்களில் முதன்மையாகிய உலக வேட்கையெனப்படும், காமத்திலாழ்ந்து நீங்க முடியாத நிலையிற்றுன்புறும் அடியேன் ஊழ் வினையினை எண்ணி வாழ்விழந்து விழிகளிரண்டும் துயில் கொள்கின்றில.
(வி - ம்.) ஆருயிர்களின் அறிவாகிய மதி குறைமதி என்பதன் காரணம்; தானே விளங்கும் தனித்தன்மையுடையதன்று. தானே விளங்கும் தனித்தன்மை வாய்ந்த தலைவனாம் சிவபெருமானின் பேரறிவு உயிர்களின் அறிவுடன் கலந்து உடனாய் நின்று விளக்கினாலன்றி அவ்வுயிர்கட்கு அறிவு விளங்காது. அக்காரணம் பற்றிக் குறைமதி என்று கூறப்படும். பிறைமதியென்பதும் இப்பொருளே பயப்பதாம்.
(71)
அன்றெ னச்சொல ஆமென அற்புதம் | நன்றெ னச்சொல நண்ணிய நன்மையை | ஒன்றெ னச்சொன ஒண்பொரு ளேயொளி | இன்றெ னக்கருள் வாய்இரு ளேகவே. |
(பொ - ள்) புறச்சமயத்தவர் ஒருவரோ டொருவர் மாறுபட்டு முழுமுதல்வன் இல்லை யெனவும், நீ சொல்லுவது அன்றெனவும் யாம் சொல்லுவது ஆமெனவும், வியத்தகு அருளிப்பாட்டு நிகழ்வுகளை யுடையன் எனவும் கூறிக்கொண்டிருப்பர். செம்பொருட்டுணிவினராகிய சித்தாந்தச் செல்வர் அனைவர்களாலும் நன்றென ஓதும் நன்மைமிக்க மெய்ப்பொருளை ஒன்றென ஓதுவர். அவ்வொண் பொருளே! இந்நாளில் அடியேனுக்கு நின் திருவருட் பேரறிவுப் பேரொளியினை அருள்வாயாக. அவ்வருளிப்பாட்டால் எளியேனின் ஆணவ வல்லிருள் அகன்றொழியும்.
இவ்வுண்மை வருமாறு :
| "அன்றென்றும் ஆமென்றும் ஆறு சமயங்கள் |
| ஒன்றொன்றொ டொவ்வா துரைத்தாலும் - என்றும் |
| ஒருதனையே நோக்குவார் உள்ளத் திருக்கும் |
| மருதனையே நோக்கி வரும்," |
| - 11. பட்டினத்தார், திருவிடை . . . மும் - 17 |
(72)
இருவ ரேபுகழ்ந் தேத்தற் கினியராம் | ஒருவ ரேதுணை என்றுண ராய்நெஞ்சே | வருவ ரேகொடுங் காலர்கள் வந்தெதிர் | பொருவ ரேயவர்க் கென்கொல் புகல்வதே. |
(பொ - ள்) திருவாணை பெற்றுப் படைத்தலுங் காத்தலும் புரிந்து வரும் அயன் அரி ஆகிய இருவருமே புகழ்ந்து போற்றுதற்கு