குறைவிலா நிறைவாய் ஞானக் கோதிலா னந்த வெள்ளத் | துறையிலே படிந்து மூழ்கித் துளைந்துநான் தோன்றா வாறுள் | உறையிலே யுணர்த்தி மோன வொண்சுடர் வைவாள் தந்த | இறைவனே யுனைப்பி ரிந்திங் கிருக்கிலேன் இருக்கி லேனே. |
(பொ - ள்.) குறைவிலாத முழுநிறைவாய்க் குற்றமில்லாத மூதறிவின் வெள்ளத்துள் தோய்ந்து முழுகி அழுந்தி நானென்னும் முனைப்புத் தோன்றாவண்ணம் உணர்விற்குணர்வாய் உள்நின்றுணர்த்தி மௌனமாகிய மிக்கசுடரும் கூர்மையுமுள்ள வாளினைத் தந்தருளிய இறைவனே உன்திருவடியினைப் பிரிந்து இவ்வுடலகத்துத் தங்கமாட்டேன்; தங்கமாட்டேன்.
(2)
இருநில மாதி நாதம் ஈறதாம் இவைக டந்த | பெருநில மாய தூய பேரொளிப் பிழம்பாய் நின்றுங் | கருதரும் அகண்டா னந்தக் கடவுள்நின் காட்சி காண | வருகவென் றழைத்தா லன்றி வாழ்வுண்டோ 1 வஞ்ச னேற்கே. |
(பொ - ள்.) முப்பத்தாறு மெய்களுள் முதற்கண் சொல்லப்படும் இந்தப் பெரிய நில முதலாக, ஒலி முடிவாகவுள்ள அத் தத்துவங்களைக் கடந்து அப்பாலாய் உள்ள பெருநில மென்று சொல்லப்படும் தூயபேரொளிப் பிழம்பாக இருப்பினும், எண்ணவும் முடியாத எல்லையில்லாத பேரின்பக்கடவுளே! நின் திருவடிக்காட்சியினைக் கண்டு களிக்க வருவாயாக வென்று அழைத்தருளினாலன்றி, வஞ்சகம் பொருந்திய எளியேனுக்கு நிலைத்த பேரின்பப் பெருவாழ்வு 1 உண்டாமோ? (உண்டாகாதென்றபடி.)
(3)
வஞ்சனை அழுக்கா றாதி வைத்திடும் பாண்ட மான | நெஞ்சனை வலிதின் மேன்மேல் நெக்குநெக் குருகப் பண்ணி | அஞ்சலி செய்யுங் கையும் அருவிநீர் விழியு மாகத் | தஞ்சமென் றிரங்கிக் காக்கத் தற்பரா பரமு னக்கே. |
(பொ - ள்.) (மனத்துக்கு மாசாகிய) வஞ்சனையும், அழுக்காறும் முதலாகிய மனக்குற்றம் நிறைய வைத்திருக்கப்பட்ட பாண்டமாகிய நெஞ்சத்தையுடைய எளியேனை வலியவந்து மேலும் மேலும் உள்ளத்தை உருகப்பண்ணி, உச்சிமேல் இருகையும் ஏறக்குவித்துத் தொழவும், விழிநீர் பெருக்கி அழவும், நின் திருவடியே நிலைத்த புகலென இரக்கம்வைத்துக் காத்தருள வேண்டியது மேலாம் மெய்ப் பொருளே! நின்பொறுப்பாகும்.
(4)
உனக்குநா னடித்தொண் டாகி உன்னடிக் கன்பு செய்ய | எனக்குநீ தோற்றி அஞ்சேல் என்னுநா ளெந்த நாளோ |
1. | 'பாரொடு,' 8. வாழாப்பத்து, 1 |