என்னைத் தான்இன்ன வண்ணமென் றறிகிலா ஏழை | தன்னைத் தான்அறிந் திடஅருள் புரிதியேல் தக்கோய் | பின்னைத் தானின்றன் அருள்பெற்ற மாதவப் பெரியோர் | நின்னைத் தான்நிக ரார்என வாழ்த்துவர் நெறியால். |
(பொ - ள்.) (ஆருயிர்கள் முதல்வன் அறிவித்தாலன்றி உலகியல் நிகழ்ச்சிகளையும், தம்மையும் தம் முதல்வனையும் அறியா என்னும் மெய்ம்மையால்) அடியேனை (முதல்வனே) இன்ன இயல்பினை உடையேனென்று அறியுந் தன்மையில்லாத பேதையேன்; தன்னைத் தான் தெரிந்தொழுகத் திருவருள் புரிவையேல், தக்கோனே! பின்பு நின்னுடைய திருவருள் பெற்ற பெருந்தவப் பெரியோர், நின்னை நிகர்வார் யாவர்? (ஒருவருமிலர்) என மொழிவர், மொழிந்து முறையாக வாழ்த்துவர்.
(3)
ஏத மின்றித்தன் அடியிணைக் கன்புதான் ஈட்டுங் | காத லன்பர்க்குக் கதிநிலை ஈதெனக் காட்டும் | போத நித்திய புண்ணிய எண்ணரும் புவன | நாத தற்பர நானெவ்வா றுகுய்வேன் நவிலாய். |
(பொ - ள்.) குற்றம் ஒரு சிறிதும் இன்றி நின் திருவடியிணைக்குப் பேரன்பாகிய காதலினைப் பெருக்கும் பேரன்பர்க்கு, நின் திருவடிநிலையாகிய கதிநிலையீது எனக் காட்டியருளும் பேரறிவுப் பெருமானே, என்றும் பொன்றா இயல்பாம் ஒருவனே, புண்ணியப்பொருளே, அளவிலா உலகினுக்கெல்லாம் ஒப்பில்லா முதல்வனே, தனக்குத் தானே தலைவனே! அறிவிலா அடியேன் எவ்வாறு பிழைப்பேன்; நவின்றருள்வாயாக. காதலர்பால் கடவுள் நிற்குநிலை வருமாறு :
| "அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி |
| இன்புறு கண்ணியொ டேற்க இசைந்தன |
| துன்புறு கண்ணியைந் தாடுந் துடக்கற்று |
| நண்புறு சிந்தையை நாடுமின நீரே." |
| - 10 269. |
(4)
வேதம் எத்தனை அத்தனை சிரத்தினும் விளங்கும் | பாத நித்திய பரம்பர நிரந்தர பரம | நாத தற்பர சிற்பர வடிவமாய் நடிக்கும் | நீத நிர்க்குண நினையன்றி ஒன்றும்நான் நினையேன். |
(பொ - ள்.) மறைகள் எவ்வளவு உள்ளன; அவ்வளவுக்கும் உள்ளனவாகிய மறை முடிவுகள் எவ்வளவு அவ்வளவின்கண்ணும் விளங்கும் திருவடியினை உடையவனே! என்றும் பொன்றாது ஒன்று போன்று நின்றருள்பவனே, முழுமுதலே, நிலையானவனே, மேலானவனே, தலைவனே, தனக்குத்தானே முதல்வனே, மேலாம் வாலறிவின்