பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

408
வடிவமாய்ப் பல திருக்கோலங்களைக் கொண்டருள்பவனே, அறமுறை குன்றா உறவோனே, மாயாகாரியமாகிய அமைதி ஆட்சி அழுந்துதல் எனப்படும் முக்குணமும் இல்லாதவனே! நின் பொன்போலும் திருவடியையன்றி அடியேன் பிறிதொன்றனையும் நினைத்தல் செய்யேன்.

(5)
நெறிகள் தாம்பல பலவுமாய் அந்தந்த நெறிக்காஞ்
செறியுந் தெய்வமும் பலபல வாகவுஞ் செறிந்தால்
அறியுந் தன்மையிங் காருனை அறிவினால் அறிந்தோர்
பிறியுந் தன்மையில் லாவகை கலக்கின்ற பெரியோய்.
    (பொ - ள்.) உலகின்கண் பள்ளி வகுப்புப்போன்றும் ஆட்சித்துறை போன்றும் தெய்வ வழிபாட்டுக்கொள்கையினையுடைய நெறிகளெனப்படும் சமயங்கள் பலவுமாய் அவ்வந்நெறிகளுக்காம் தெய்வத் திருக்கோலங்களும் பலவும் நிறைந்து காணப்படுகின்றன. அங்ஙனமாயின் நின் மெய்ம்மையினை எவர் உணர்வார்? நின் திருவருளால் உணர்வினாலுணரும் உயர்ந்தோர் உணர்ந்தபின் ஒருகாலத்தும் நீங்குதல் இல்லாதபடி அவர்கள்பால் வெளிப்படுகின்ற பிறவாயாக்கைப் பெரியோனே!

    திருக்கோலங்கொள் தெய்வங்கள் பலவும் சிவபெருமான் திருவாணையினால் இயங்குவன என்னு முண்மை வருமாறு :

"இங்குநாஞ் சிலர்க்குப்பூசை இயற்றினால் இவர்க ளோவந்
 தங்குவான் தருவார் அன்றேல் அத்தெய்வம் அந்தனைக்காண்
 எங்கும்வாழ் தெய்வ மெல்லாம் இறைவனா ணையினால் நிற்ப
 தங்குநாஞ் செய்யுஞ் செய்திக் காணைவைப் பால ளிப்பன்."
- சிவஞானசித்தியார், 2 - 2 - 23.
(6)
பெரிய அண்டங்கள் எத்தனை அமைத்ததிற் பிறங்கும்
உரிய பல்லுயிர் எத்தனை அமைத்தவைக் குறுதி
வருவ தெத்தனை அமைத்தனை அமைத்தருள் வளர்க்கும்
அரிய தத்துவ எனக்கிந்த வண்ணமேன் அமைத்தாய்.
    (பொ - ள்.) பெரிதாகக் காணப்படும் அண்டங்கள் அளவில்லாதன அமைத்தருளினை; அவ்வவ்வண்டங்களில் வாழும் தகுதியினையுடைய அளவில்லாத ஆருயிர்கட்கு வேண்டும் அளவில்லாத உடல்களையும் படைத்து அவ்வுயிர்களை அவ்வுடல்களுடன் பொருத்தியருளினை; அவ்வுயிர்கட்கு உறுதி தரும் பல பொருள்களையும் படைத்தளித்தனை; இங்ஙனமாக யாண்டும் திருவருளினையே வளர்த்தருளும் அருமைமிக்க பெரிய உண்மைப்பொருளே! எளியேன்மாட்டும் திருவருள் சுரவாது அடியேன் வருந்தும்வண்ணம் இந்நிலைமையின்கண் வைத்தமைக்கு என்ன காரணம்?

(7)