பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

422
தேவர்கள், மக்கள் முதலிய அனைவர்களிலும் மனமே! நீ வேண்டாவென்று தள்ளிவிடற்கு ஒருவராலும் முடியாதென்க; ஓருயிர்க்கும் முடியாதென்க; இம்மை வாழ்வும், மறுமை வாழ்வும் உன் துணையின்றி எவர்க்கும் எய்துமோ? வீணாக உன்னை அறிவில்லாத அழிவுடைய அசத்தென்றல் முறைமையன்று; அறிவுள்ள அழிவில்லாத சத்தெனவே உன்னை வாயார வாழ்த்துவேன் யான்; என்னுடைய தாழ்வு நீங்க, நீ உன்னுடைய பெருமை மிக்க பிறப்பிடத்திற் செல்லுதல் வேண்டும்.

(9)
வேண்டியநாள் என்னோடும் பழகியநீ
    எனைப்பிரிந்த விசாரத் தாலே
மாண்டுகிடக் கினும்அந்த எல்லையையும்
    பூரணமாய் வணக்கஞ் செய்வேன்
ஆண்டகுரு மௌனிதன்னால் யானெனதற்
    றவனருள்நான் ஆவேன் பூவிற்
காண்டகஎண் சித்திமுத்தி எனக்குண்டாம்
    உன்னாலென் கவலை தீர்வேன்.
    (பொ - ள்.) (மனமே ! ) அளவிறந்த நாள்கள் என்னோடும் விட்டு நீங்காது ஒட்டிப்பழகிய நீ (இப்போது என்னை விட்டுப் பிரிதல்வேண்டும்.) என்னைவிட்டுப் பிரிந்த வருத்தத்தாலே நீ மாண்டுவிடுவாய் எனினும் நீ மாண்டுகிடக்கும் அவ்வெல்லையினை முற்றாக வணங்குதல் புரிவேன்; அந்நிலையில் அடியேனை ஆண்டுகொண்டருளிய மௌன குருவின் தண்ணளியால் யான் எனது என்னும் இருஞ்செருக்கற்று, அச் சிவகுருவின் திருவருளே யான் ஆவேன்; நிலவுலகின்கண் காணுந் தகுதி வாய்ந்த எண்பெரும் பேறுகளும், திருவடிப் பேறும் எனக்குண்டாகும்; உன்னாலுண்டாம் கவலைகளும் தீர்ந்தொழிவேன்.

(10)
தீராத என்சனன வழக்கெல்லாந்
    தீருமிந்தச் சனனத் தோடே
யாரேனும் அறிவரிய சீவன்முத்தி
    யுண்டாகும் ஐய ஐயோ
காரேனுங் கற்பகப்பூங் காவேனும்
    உனக்குவமை காட்டப் போமோ
பாராதி யாகஏழு மண்டலத்தில்
    நின்மகிமை பகர லாமோ.
    (பொ - ள்.) (மனமே, நீ மாண்டுவிடுவையாயின்) பன்னெடு நாட்களாக நீங்காது தொடர்ந்து வரும் என் பிறவி வழக்கனைத்தும் இப் பிறவியொன்றுடனே தீர்ந்தொழியும், எவரானும் அறிதற்கரிய சிறப்புயிர் எனப்படும் சீவன் முத்தி நிலையும் உண்டாகும்; ஐயனே!