தன்மய மானசு பாவத்தில் மெள்ளத் தலைப்படுங்கால் | மின்மய மான சகம்யா துரைத்தென் வெளியில்உய்த்த | சின்மய முத்திரைக் கையேமெய் யாகத் தெளிந்தநெஞ்சே | நின்மயம் என்மயம் எல்லாம் நிறைந்த நிராமயமே. |
(பொ - ள்.) சிவபெருமானின் பெருநிறைவாகிய தன்மையில் திருவருளால் மெள்ளத் தலைப்படுங்கால், மின்போலத் தோன்றி மறைவதாகிய இவ்வுலகம் என்ன கூறினும் என்ன ஆவது? விளக்கமுந்தெளிவும் பொருந்தத் தந்தருளிய அறிவடையாளத் திருக்கையினால் முப்பொருளுண்மையினைத் தெளிந்த நெஞ்சமே! சிவகுருவின் எங்கு நிறை பெருநிறைவினுள் அடியேன் அடங்கு நிறைவும் அமைந்துள்ளது. இரண்டும் புணர்ப்பினால் கடவுட்டன்மை வாய்ந்தனவே; நிராமயம் - கடவுள்.
(42)
ஆரிங் கலையிஞ் சுருதியுங் காண்டற் கரியவுனைத் | தோயும் படிக்குக் கருணைசெய் வாய்சுக வான்பொருளே | தாயும் பிதாவுந் தமருங் குருவுந் தனிமுதலும் | நீயும் பரையுமென் றேயுணர்ந் தேனிது நிச்சயமே. |
(பொ - ள்.) ஆராயப்படுகின்ற கலையும், மறையும் காண்பதற்கரிய நின்திருவடியினை அடியேன் நின்திருவருளால் வந்து பொருந்தும்படி தண்ணருள் புரிவாயாக. பேரின்பப் பெரும்பொருளே! அன்னையும் அத்தனும், அன்புநிறை உறவினரும் ஆண்டுகொண்டருளும் மெய்யுணர்வுக்குரவனும், ஒப்பற்ற முழுமுதலும் 1 நீயும் நின்னை விட்டு நீங்காது மணியொளிபோல் காணப்படும் திருவருளாற்றலுமாம் என்றே திருவருளால் உணர்ந்தேன்; இது மாறா உறுதியேயாகும்.
(43)
அல்லும் பகலும் உனக்கே அபயம் அபயமென்று | சொல்லுஞ்சொ லின்னந் தெரிந்ததன் றோதுதிப் பார்கள்மனக் | கல்லுங் கரைக்கும் மவுனா உனது கருணைஎன்பால் | செல்லும் பொழுதல்ல வோசெல்லு வேனந்தச் சிற்சுகத்தே. |
(பொ - ள்.) போற்றி போற்றியெனும் பொருண்மறை புகன்று தொழுபவர்களுடைய நெஞ்சக்கல்லும் கரைந்துருகும்படி தண்ணளி சுரக்கும் மோனகுருவே, மறப்புக்கிடமாகிய இரவும், நினைப்புக்கிடமாகிய பகலும் நின்திருவடிக்கே அடைக்கலம் அடைக்கலம் என்று ஓலமிட்டுரைக்குமொழி இன்னமும் நின்திருச்செவிக்கண் எட்டியதின்றோ? நின்திருவருள் அடியேன்பால் மிக்கோங்கி விளங்கும் பொழுதன்றோ நின் திருவடிப் பேரின்பப் பெருவாழ்வு அடியேனுக்குக் கிட்டுவதாகும்.
(44)