(பொ - ள்.) மிகவும் அறியாமையாற் பற்றப்பட்டு மூடம் பொருந்திய நெஞ்சமே, பலபல நூல்களைக் கற்றும் செவிச்செல்வமாகிய பல கேள்விகளைக் கேட்டும் உள்ளம் ஒருநிலைப்படாது காற்றாடி போன்று சுற்றி உழலுந்தொழிலால் அடையும் பயன் யாது? சிற்றின்பத்துடன் சுழன்றுகொண்டிருப்பதனால் பிறவித்துன்பமேயன்றி பிறவாப்பேரின்பம் வாய்க்குமோ? (குற்றஞ்சுருங்கிச் செயலற்றுக் குணமேமிகுந்து மேலிட்டு) வழுவாதொழுகும் மெய்யன்பர் திருக்கூட்டத்தையே உற்றதுணையென நம்புவாயாக. குணமாகிய ஒளிதோன்றக் குற்றமாகிய இருள் சுருங்குவது இதற்கொப்பாகும். சுருங்குவது - அடங்குவது.
(57)
நீயென நானென வேறில்லை யென்னும் நினைவருளத் | தாயென மோன குருவாகி வந்து தடுத்தடிமைச் | சேயெனக் காத்தனை யேபர மேநின் திருவருளுக் | கேயென்ன செய்யுங்கைம் மாறுள தோசுத்த ஏழையனே. |
(பொ - ள்.) மேலாம் தனிப்பெரும் பொருளே! நீயென்றும் நானென்றும் புணர்ப்பு நிலையாகிய அத்துவித உண்மையினை உணராமல் எண்ணியும் பேசியும் வந்துள்ளேன். அங்ஙனம் வேறுபட்டு நிற்கும் நிலையில்லையென்னும் உண்மையினை உறுதியாகக் கொள்ளும் நினைவு அருளும் பொருட்டுத் தாய்போன்று மிக்க தண்ணளிசுரந்து மோனகுருவாகிவந்து, புலனுகர்ச்சியாகிய உலகியல் நோக்கத்தில் செல்லும் செலவினைத் தடுத்து, எந்நாளும் மாறா அடிமையாகிய யான் நின்னுடைய சேயென்னும் மெய்ம்மையுணர்த்திக் காத்தருளினையே; அவ்வாறு செய்தருளிய நின்திருவருளுக்கு அடியேன் செய்யும் கைம்மாறு யாதுளது? (ஏதும் இல்லையென்பதாம்.)
(வி - ம்.) தானே முழுதுணர் முதல்வனும், அவன் உணர்த்த உணர் ஆருயிரும் தாயும் சேயும் போன்ற சிறந்ததன்மையர். தனித் தமிழாகமமாகிய சிவஞானபோதம் என்னும் மெய்ப்பொருளுணர்த்தும் மேலாம் மெய்கண்ட நூலின் வழி நூலாகிய சித்தியாரில்.
| "மன்னவன்றன் மகன்வேட ரிடத்தே தங்கி |
| வளர்ந்தவனை யறியாது மயங்கி நிற்பப் |
| பின்னவனும் என்மகனீ யென்றவரிற் பிரித்துப் |
| பெருமை யொடுந் தானாக்கிப் பேணு மாபோல் |
| துள்னியஐம் புலவேடர் சுழலிற் பட்டுத் |
| துணைவனையும் அறியாது துயருறுந்தொல் லுயிரை |
| மன்னுமருட் குருவாகி வந்தவரி னீக்கி |
| மலமகற்றித் தானாக்கி மலரடிக்கீழ் வைப்பன்" |
| - சிவஞானசித்தியார்; நூற்பா - 8. |
எனவரும் மெய்ம்மை மேலதனை நன்கு விளக்கும்.