பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

447
    நோயுற்றானொருவன் தக்கமருத்துவனை யடைந்து அவனால் வேண்டும் நன்மருந்து தரப்பட்டு நோய்முற்றும் நீங்கி நலமுற்று அவனை விட்டு நீங்காது அவனுடன் ஒட்டி வாழ்வதும் மேலதற்கொப்பாகும். ஒருவனுக்குவேண்டிய இன்றியமையாப் பொருள் எதுவாயினும் அதற்கு அவன் அடிமையே யென்பதில் ஐயம் சிறிதும் இன்று. எடுத்துக்காட்டாகக் கேடில்விழுச் செல்வமாங் கல்வியினைக் கொள்வோர், அத்தகைய உண்மைக் கல்விக்கு அடிமையாகாவிட்டால் அக் கல்வியின் பயனையடையவோ, அதன் வழி நின்று ஒழுகி நன்மை எய்தவோ அவர்க்கு முடியாதென்ப தொருதலையன்றோ?

    என்றும் மாறா அடிமையாம் உண்மை வருமாறு :

"தன்னை யறிவித்துத் தான்றானாச் செய்தானைப்
 பின்னை மறத்தல் பிழையலது - முன்னவனே
 தானேதா னாச்செய்துந் தைவமென்றுந் தைவமே
 மானே தொழுகை வலி."
- சிவஞான போதம், 12 - 4. 3.
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
 செய்ந்நன்றி கொன்ற மகற்கு."
- திருக்குறள், 110
(58)
ஆத்திரம் வந்தவர் போல்அலை யாமல் அரோகதிட
காத்திரந் தந்தென்னை யேஅன்னை போலுங் கருணைவைத்திம்
மாத்திரம் முன்னின் றுணர்த்தினை யேமவு னாஇனிநான்
சாத்திரஞ் சொன்ன படிஇய மாதியுஞ் சாதிப்பனே.
     (பொ - ள்.) பேசாமையென்னும் பெரும் பண்பமை மௌனத்தைக் கைக்கொண்டொழுக வழிகாட்டியருளிய மௌனகுருவே, மிகுந்த வேகம் வந்தவரைப் போன்று அலைந்து உலையாமல், நோயில்லா நலத்துடன் உறுதியான உடம்பையும் தந்தருளி, அடியேனைத் தாயினு மிக்க தண்ணளிபுரிந்து, இத்துணையாயினும் முன்னின் றுணர்த்தி யருளினையே, இனிமேல் எளியேன் திருமாமறை திருமாமுறையாகிய திருவருண் மெய்ந்நூல்களில் ஓதியருளியபடி விலக்கியன வொழித்து விதித்தன கடைப்பிடித்துச் செய்வதாகிய இயமாதியும் முற்று விப்பேன்.

     (வி - ம்.) ஆருயிர்கட்கு விளக்க விளங்கும் சிற்றறிவு உண்மை யானே திருவருண் மெய்ந்நூல்கள் சிவனருளால் தோன்றுவவாயின. அந்நூல்களின் மெய்ம்மை கொண்டே எண்ணில்லாத ஆருயிர்களின் உண்மை எளிதாகப் பெறப்படும். அவ்வுண்மை வருமாறு :