பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

463
உடலைப் பழித்திங் குணவுங் கொடாமல்
விடவிடவே நாடுவரோ மெய்யைப் - படபடென
வேண்டுவேன் இந்தவுடல் மெய்யுணராப் பொய்யன்நான்
ஆண்டநீ தானே அறி.
     (பொ - ள்.) (கரையேறக் கைத்தந்த கருவியைப் பழுதின்றிப் பேணிப் பயன்பெறுவதுபோன்று) திருவடி சேரத் திருவருளால் தரப்பட்ட இவ்வுடலை உண்மையுணர்ந்தவர் பழித்து அது செம்மையுறத் தக்க பொருர்திய திருந்தும் உணவுங்கொடாமல் விட்டுவிடும்படி விரும்புவரோ? (விரும்பார் அதனால்) உண்மையுணராத நானும் இந்த வுடலை விரைவாக விரும்புவேன்; இம்மெய்ம்மையினை அடிகளே அறிவீராக.

(34)
அறியாயோ என்னையுநீ ஆண்டநீ சுத்த
வெறியாய் மயங்கவுமேன் விட்டாய் - நெறிமயங்கிக்
குன்றுஞ் செடியுங் குறுகுமோ ஐயாவே
கன்றுகெட்டால் தாயருகே காண்.
     (பொ - ள்.) அழகும் ஆற்றலும் ஒருங்கமைந்த முதல்வனே, நீ எளியேனையும் அறிந்துகொள்ள மாட்டாயோ? அடியேனை ஆட்கொண்டருளிய நீ மிகுந்த வெறியனாய் மயக்கங்கொண்டு திரியுமாறு கைவிட்டு விட்டது எதன்பொருட்டு? தானீன்ற கன்று மறைந்துவிட்டால் அதன் தாய்ப்பசு அண்மையிலிருந்துகொண்டு (உடனே அணைத்துக்கொள்ளாமல்) குன்றிலும் செடியிலும் வழிதவறித் தேடுமோ?

     (வி - ம்.) (அங்ஙனம்) தேடாது உடனேயே தன்வயப்படுத்திக் கொள்ளும். அதுபோல அடியேனைத் தேவரீரும் வெளிகொள்ளவிடாது ஆண்டு தன்வயப்படுத்தியருளுதல் வேண்டும் என்பதாம்.

(35)
ஏதுக் குடற்சுமைகொண் டேனிருந்தேன் ஐயனே
ஆதிக்க மோன அருள்தாயே - சோதியாம்
மன்ன நிருவிகற்ப ஆனந்த நிட்டையிலே
பின்னமற நில்லாத பின்.
     (பொ - ள்.) முதல்வனே, உரிமை வாய்ந்த மௌன நிலையினை அகுளிச் செய்கின்ற அன்னையே; இயற்கைப் பேரொளிப் பிழம்பே, வேறுபாடில்லாத நிட்டையின்கண் இரண்டறப் பேரின்பமுற்று நில்லாதபோது, இவ்வுடற்சுமையை எதன்பொருட்டுக் கொண்டு திரிந்தேன்?

(36)
பின்னும் உடற்சுமையாப் பேசும் வழக்கதனால்
என்னபலன் நாமுற் றிருந்தோமே - அன்னதனால்
ஆனந்தந் தானேதாம் ஆகுமெம் ஐயனே
ஏனிந்தத் துன்பம் இனி.