(பொ - ள்.) கற்போன்ற வலிய நெஞ்சே, இரவும் பகலும் இடையறாது பேரன்புடனே தானிருந்தால், கருங்கல்லும் உருகி நெகிழாதோ? நெஞ்சே! நீ ஏன் பொல்லாத தவறான வழிகளை நினைந்தாய்; எப்பொழுது நீ ஒடுங்கி விடுவாயானால், அந்த நிலையிலே மாறாப் பேரின்பமுண்டு.
(40)
கொடுத்தேனே யென்னைக் கொடுத்தவுடன் இன்பம் | மடுத்தேனே நீடூழி வாழ்ந்தே - அடுத்தேனே | பெற்றேனே பெற்றுப் பிழைத்தேனே சன்மஅல்லல் | இற்றேனே ஏழைஅடி யேன். |
(பொ - ள்.) அறிவில்லாத யான் என்னை நின் திருவடிக்கு அடிமையாகக் கொடுத்துவிட்டேன்; அங்ஙனம் ஒப்புவித்தவுடன் இறவாப் பேரின்பம் எய்தினேன். அடுத்திருந்து நீடு வாழ்ந்தேன்; திருவருளால் பெறவேண்டியவை அனைத்தும் பெற்றுள்ளேன். அதனால் கடைத்தேறினேன்; பிறவிப்பெருந்துன்பம் சிறிதுமின்றி நீங்கினேன்.
(41)
பெற்றோம் பிறவாமை பேசாமை யாயிருக்கக் | கற்றோம் எனவுரைக்கக் காரியமென் - சற்றேனும் | நீக்கற்ற இன்ப நிலைபொருந்தி ஏசற்று | வாக்கற்றாற் பேசுமோ வாய். |
(பொ - ள்.) அடுத்தடுத்துப் பலகால் இருவினைக்கீடாகப் பிறந்துழலும் துன்பினின்றும் வீடுபெற்றோம்; அஃதாவது பிறவாப்பெருநிலை எய்தினேம்; வாய்பேசாமை என்னும் மௌனநிலை நீங்காதிருக்கக் கற்றுள்ளோம். அங்ஙனமிருந்தும், இவற்றை வாய்கொண்டு சொல்லுவதனால் வரும்பயன் யாது? நீ கற்றுள்ள இன்பநிலையினைப் பொருந்திப் பழியற்றுப் பேச்சும் அற்றால் வாயானது சொல்லிக்கொள்ளுமோ? (கொள்ளாதென்க.)
(42)
காலன் தனையுதைத்தான் காமன் தனையெரித்தான் | பாலன் பசிக்கிரங்கிப் பாற்கடலை - ஞாலமெச்சப் | பின்னே நடக்கவிட்டான் பேரருளை நாடாதார்க் | கென்னே நடக்கை யினி. |
(பொ - ள்.) "பதத்தெழு மந்திரம் அஞ்செழுத்தோதிப்" பத்தி மிகுந்து திருமாமறை முறைப்படி வழிபட்ட மாணியாகிய மார்க் கண்டேய முனிவரைக் கொண்டுபோதற் பொருட்டு ("சாற்று நாளற்ற தென்று தருமராசற்காக) வந்த காலதூதுவரை உதைத்தருளினன்; மால் முதலான தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்கிச் சிவபெருமான் திருமுன் மலர்க்கணை கொண்டு மறுகிவந்த காமனை நெற்றிக்கண்ணால் எரித்தருளினன்; (புலிக்கால் முனிவர்தம் அருமை மகனார்) உபமன்னிய முனிவர்தம் பசிக்கிரங்கி, உலகெலாம் வியக்கும்படி திருப்பாற்கடலை அவன்பின்னே நடந்து போமாறு பணித்தருளினன். அத்தகைய பெருமானின் திருவருளை நாடாதார்க்கு எத்தகைய சிறப்பான நடக்கையுள்ளது? (ஏதுமில்லை)