எளியேனிடம் அது தருக இது தருக என்று சண்டையிடுதலால் என்சிந்தை மயக்க மெய்திச் சுழன்று கலங்குகின்றது; அடிமையாகிய யான் நின் திருவடிக்கண் நீங்காப் பெரும் பித்துக் கொண்டால் பின்னைப் பிறப்பு உண்டாகுமோ? (உண்டாகாதென்பதாம்.)
இவ்வுண்மை வருமாறு :
| "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் |
| இறைவ னடிசேரா தார்." |
| - திருக்குறள், 10. |
(46)
நிறைகுடந்தான் நீர்கொளுமோ நிச்சயமா மோன | முறையுணர்ந்தார் யாதை முயல்வார் - பிறையணிந்த | மிக்ககயி லாயமலை வித்தகனே வேதியனே | செக்கரணி மேனியனே செப்பு. |
(பொ - ள்.) நீர் நிறைந்த குடம் பிறிதொரு நீரைக் கொள்ளுமோ? (கொள்ளாது) அது போன்று உறுதியாக மௌனமுறையினைக் கைக்கொண்டொழுகும் நல்லார், அம் மோன நிலைக்கு வேறான எதனையுங் கைக்கொள்ளுதல் செய்ய முயல்வரோ? பிள்ளைப்பிறையினை அணிந்துள்ள எல்லாவற்றினுக்கு மேலான கைலாயம் எனப்படும் திரு வெள்ளிமலையில் வீற்றிருந்தருளும் வியத்தகு மேலோனே, மூதறிவாளனே, செம்மை நிறம் வாய்ந்த திருமேனியினை உடையவனே திருவாய் மலர்ந்தருள்வாயாக. நல்லார் - சித்தாந்தசைவர்.
(வி - ம்.) மன்னுமருளால் மணந்து வாழ்வோர் பிறர்தம்மை, உன்னுநிலை கொள்ளார்தம் ஒப்புப் போல் மோன நிலை எய்திய நல்லோரும் சிவனடி நிட்டையன்றிப் பிறிதெதையும் விரும்பார்.
(47)
துங்கமழு மானுடையாய் சூலப் படையுடையாய் | திங்களணி செஞ்சடையாய் சேவுடையாய் - மங்கையொரு | பாலுடையாய் செங்கட் பணியாய்என் சென்னியின்மேல் | காலுடையாய் நீயே கதி. |
(பொ - ள்.) உயர்வும் சிறப்பும் தூய்மையும் வாய்ந்த மழுப்படையினை உடையவனே! மும்மல வழுக்கை1 மூளவொட்டாது முற்றாக விலக்கியருளும் முத்தலைவேலைக் கைக்கொண்டருளியவனே, திங்களைச் சூடியருளிய செவ்விய திருச்சடையினை உடைய செல்வனே, வனப்பாற்ற லெனப்படும் மாறாநிலைசேர் திருவருள் மங்கையினை உவந்து ஒருபாகமாகக் கொண்டருளியவனே, சிவந்த கண்களையுடைய பாம்பினை அணியாக அணிந்தருளியவனே, அடியேனின் புல்லிய முடியின்மீது சிவதீக்கையின் சிறப்பாகிய திருவடியினை வைத்தருளியவனே, எளியேனுக்கு நின்திருவடியே நிலைத்த புகலிடமாகும்.
(48)
1. | 'அருள்பொழியும்', 12. சிறுத்தொண்டர், 35. |