பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

468

இனிய கருணைமுகில் எம்பிரான் முக்கட்
கனியமிர்த வாரியின்பக் கட்டி - தனிமுதல்வன்
நித்தன் பரமன் நிமலன்நிறை வாய்நிறைந்த
சுத்தன் நமக்கென்றுந் துணை.
     (பொ - ள்.) இனிமை மிகுந்த பேரருளைப் பொழிகின்ற மேகமே! எமக்குத் தலைவனே, அன்பு அறிவு ஆற்றல்களாகிய பண்பு விரியாம் மூன்று திருக்கண்களையுடையவனே, உண்டற்கினிய உயர் பழமும், பேரின்பப் பெருங்கடலும், உண்ண உண்ணத் தெவிட்டாத இனிய கட்டியும் ஆய தனிமுதல்வனே, என்றும் பொன்றா இயல்பினனே, மேலானவனே, இயல்பாகவே பாசங்களினீங்கியவனே, யாண்டும் ஒழிவற நிறைந்து நின்றருளும் தூயோனே என்றென்றும் அன்புடன் வழிபடுவோர்க்குத் துணையாம் அவன். அதுபோல் நமக்கும் எந்நாளும் துணையாவன்.

(49)
நீதியாய்க் கல்லாலின் நீழலின்கீ ழேயிருந்து
போதியா உண்மையெல்லாம் போதித்தான் - ஏதில்
சனகாதி யாய தவத்தோர்க்கு ஞான
தினகரனாம் மவுன சிவன்.
     (பொ - ள்.) மூதறிவுவண்ணமாம் பகலோன் எனப்படும் சிவ சூரியன் மௌன நிலைக் கோலத்துடன் சிவகுருவாய் அறமுறை அந்தணனாய், கல்லாலின் நீழலிலே எழுந்தருளியிருந்து சனகர் முதலாகச் சொல்லப்படும் குற்றமற்ற நற்றவத்தோர்க்கு மலைவுதீர வேண்டி அறிவுறுத்தத்தக்க அரிய பெரிய உண்மைகளையெல்லாம் தண்ணளிசுரந்து போதித்தருளின.

(50)
தேகச் செயல்தானுஞ் சிந்தையுட னேகுழையில்
யோகநிலை ஞானிகளுக் கொப்புவதோ - மோகநிலை
அல்லலிலே வாழ்வாரோ அப்பனே நீயற்ற
எல்லையிலே சும்மா இரு.
     (பொ - ள்.) மனமாகிய அப்பனே, மூதறிவு பெறுதற்குப் படிபோன்று காணப்படும் யோக நிலையானது மனத்தொடு பொருந்தியது; (மெய்யுணர்வுநிலை மனமிறந்தது) அம் மனமும் உடம்பும் குழையப்பெற்ற மெய்யுணர்வுத்தவத்தினர் கடந்த யோகநிலையினை மேற்கொள்ளுதற்கு ஒவ்வார். அவர்கள் மனத்துடன் இயைந்து வெளியுலகிற் சென்று பெருவேட்கை யென்னும் மோகநிலைத்துன் பத்திலே வாழ்வினை நடத்தார்; (அதனால் மனமே) நீயொரு பொருளென்று எண்ணுதற்கு இல்லாது உன் செயலற்ற இடத்தே வாளா இருக்கக்கடவாய்.

     (வி - ம்.) மூதறிவு - சிவஞானம். 'மனமும் தேகச்செயலும் குழைதல்' செயலறுஞ் செவ்வியை அடைதல். மூதறிவுநிலை கைவந்தவர்தம் முழுப்பாரமும் சிவனையே பொறுத்ததாகும். இதுவே குழைவின் தன்மையாம். அவ்வுண்மை வருமாறு :