பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

473

தோன்றி ஆடுதல் புரிவது எதன் பொருட்டு என்று எண்ணியருள்வாயாக, அவன் அசைந்தாடினாலன்றி உயிரும் உலகும் அசைந்தாடி இயங்குதல் புரியா. அதன் பொருட்டு ஆட்டும் அவன் ஆடியருள்கின்றனன். வேறு எதன் பொருட்டுமன்று. இவ்வருளிப்பாடு அவனுக்குத் திருவிளையாடலே யாகும்.

     (வி - ம்.) விளையாடலென்பது கையும் கருவியுங் கொண்டு ஒன்றனைப் புரியாமல் கருத்தாகிய திருக்குறிப்பான திருவிளையாடல் புரிந்தருள்வன். நாம் நிருவிகற்ப நிட்டையினை எய்துதற் பொருட்டு அருள் மிகுந்த அவனும் அதனைத் திருவுள்ளங்கொண்டருளுதல் வேண்டும். இங்ஙனமன்றி விளையாட்டென்பதே பற்றி வீணெனக் கொள்ளுதல்தவறு. உயிரசைவிக்க உடல் அசைவதையும் காண்க.

(62)
அவனே பரமும் அவனே குருவும்
அவனே அகில மனைத்தும் - அவனேதாம்
ஆனவரோ சொன்னால் அவனே குருவெனக்கு
நான் அவனாய் நிற்பதெந்த நாள்.
     (பொ - ள்.) (பண்டறி சுட்டும் பலரறிசுட்டும், சேய்மைச் சுட்டுமாய்ப் பரவை வழக்காய் யாண்டும் பயிலப்பட்டுவரும்) எவர்க்கும் எவற்றினுக்கும் மேலாய் எல்லாங்கடந்த அவனே விழுமிய முழுமுதற் பொருளாவன். (தோன்றாத்துணையாக நின்றருளும்) தோன்றுந்துணையாக நேர்வந்தருளிய சிவகுருவும் அவனே, யாண்டும் நீக்கமற நிறைந்து நின்றியக்கும் இயவுளும் அவனே, (இவ் வுண்மையினைத்) திருவருளால் அவனே தாமாக அவன் திருவடியின்கீழ்த் தலைமறைவாக நின்று நீங்காஇன்பந் துயக்கும் சிவனடியார்களே ஓதியருளினர். அவரே அடியேனை ஆண்டுகொண்டருளிய மெய்க்குரவரும் ஆவர். அடியேன் அவனாய் அமையு நாள் எந்நாளோ?

     (வி - ம்.) சிவபெருமானை அவன் என்றும் ஆருயிர்களை இவன் என்றும் குறிக்கும் குறிப்பு யாண்டும் பயிலப்பட்டுள்ளது. அஃது "அவனிவனாய் நின்ற முறை ஏகனாகி, அரன்பணியில் நின்றிடவும் அகலும் குற்றம்" என்னும் சிவஞானசித்தியார் பத்தாம் நூற்பாவான் உணரலாம்.

     இவ்வுண்மை 'சிவயம' சி : ச் + இ + அ - சி ச் - சரண் என்னும் சொல்லின் முதலெழுத்தின் மெய்யாகும். இ என்பது ஆருயிரைக் குறிக்கும் இவன் என்னும் சொல்லின் முதலாகும். அ என்பது கடவுளைக் குறிக்கும் அவன் என்னும் சொல்லின் முதலாகும். வ, ய இரண்டும் இடையினம். நம இரண்டும் மெல்லினம். ச என்பது வல்லெழுத்து. எனவே இத் தனித்தமிழ் மந்திரம் தமிழ் எழுத்துக்களின் இயல்பு முற்றும் பொருந்தியதாயிருப்பது காண்க.

(63)
நாளவங்கள் போகாமல் நாள்தோறும் நந்தமையே
ஆளவந்தார் தாளின்கீழ் ஆட்புகுந்தாய் - மீளஉன்னைக்
காட்டாமல் நிற்குங் கருத்தறிந்தால் நெஞ்சேஉன்
ஆள்தானான் ஐயமில்லை யால்.