பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

474

     (பொ - ள்.) மனமே, நாடொறும் திருவடிப் பேற்றிற்குரிய சிவ வழிபாடு முதலிய நற்றவங்களைப் புரியாமல், வேண்டாத வீண் செயல்களில் விரைந்து செல்கின்றனையே; அங்ஙனம் செல்லாது ஒவ்வொரு நாளும் நம்மை ஆண்டுகொண்டருள எழுந்தருளி வந்த மோன குருவின் தாளிணைக்கீழ் அடிமையாகப் புகுந்தனையே, மீண்டும் வெளிப்போந்து உன்னைக் காட்டாமல் நிற்கும் கருத்தினை நாமறிவோமாயின் நான் உனக்கு அடிமையே; இதில் சிறிதும் ஐயமில்லை.

(64)
யான்தான் எனல்அறவே இன்பநிட்டை என்றருணைக்
கோன்றா னுரைத்தமொழி கொள்ளாயோ - தோன்றி
இழுக்கடித்தாய் நெஞ்சேநீ என்கலைகள் சோர
அழுக்கடிக்கும் வண்ணார்போ லாய்.
     (பொ - ள்.) யான் எனது என்னும் செருக்கு முற்றாக அற்றொழியவே மாறுதலில்லாத, இன்பநிட்டை எளிதாகவும் இனிதாகவும் கைகூடு மென்று செம்பொருட்டுணிவினராம் அருணகிரிநாதர் அருளிச் செய்துள்ள உறுதி மொழியை அறுதிபெறக் கொள்ள மாட்டாயோ? முன்தோன்றி என்னுடைய ஆடைகள் சோரும்படி அழுக்கொழிய அடிக்கின்ற வண்ணாரை யொத்து, மனமே என்னைத் தீ நெறியில் புகுத்தினையே. யான் - அகப்பற்று. தான் - புறப்பற்று. இழுக்கடித்தல் - தீ நெறியிற் புகுத்தல்.

(65)
எங்குஞ் சிவமே இரண்டற்று நிற்கில்நெஞ்சே
தங்குஞ் சுகநீ சலியாதே - அங்கிங்கென்
றெண்ணாதே பாழி லிறந்து பிறந்துழலப்
பண்ணாதே யானுன் பரம்.
     (பொ - ள்.) நெஞ்சே! (உயிர்க்குயிராகி யாண்டும் பிரிப்பின்றி நிற்கும் சிவபெருமான் உடலகத்துள் நிற்கும் ஆருயிரினைத் தன் இருக்கையாகவும், அவ்வுயிர்தங்கும் உடலினைத் தனது சிறந்த உறையுளாகவும் கொண்டு திகழ்கின்றனன்;) எல்லா இடங்களிலும் சிவபெருமான் எள்ளில் எண்ணெய் போன்று அகம் புறமாய் நின்றருளுகின்றனன். அவ்வுண்மையுணர்ந்தால் இருபொருள் எண்ணம் விட்டு எங்குஞ் சிவனை ஒரு பொருள் நோக்குடன் காணுதல் கூடும்; அங்ஙனம் கண்டால் இன்ப நிட்டைப் பெருநிலைவந்து கைகூடும். அவ்விடத்தில் இறைவன், இவ்விடத்தில் இறைவன் என்று எண்ணாமல் எங்கு மென்று எண்ணுக. அங்ஙனம் எண்ணாமல் வீணாக இறந்து பிறந்து உழலப் பண்ணாதே; யான் உனக்கு அடைக்கலம்.

(66)
மெய்யைப்பொய் என்றிடவும் மெய்யணையாப் பொய்ந்நெஞ்சே
பொய்யைத்தான் மெய்எனவும் போகுமோ - ஐயமறத்
தன்மயத்தை மெய்யெனவே சார்ந்தனையேல் ஆனந்தம்
என்மயமும் நின்மயமு மே.