பேரின்பத்தினை அவர்க்கு நாட்டினன்; பேரின்பப் பெரு நாட்டிற் கூட்டி இன்புறுத்தருளினன் மோனகுரு.
(76)
குருவாகித் தண்ணருளைக் கூறுமுன்னே மோனா | உருநீ டுயிர்பொருளும் ஒக்கத் - தருதியென | வாங்கினையே வேறும்உண்மை வைத்திடவுங் கேட்டிடவும் | ஈங்கொருவர் உண்டோ இனி. |
(பொ - ள்.) மோனகுருவே! தேவரீர் அடியேனுக்குக் குருவாக அமைந்து ஆட்கொள்ளுமுன்னமே, எளியேனுடைய உடல் பொருள் ஆவி மூன்றனையும் தருவாயாக என்று மொழிந்து பெற்றுக்கொண்டனையே (பெற்றுக்கொண்டு நின்திருவடியினை எளியேன் உணர்விற் பதித்தருளினை. அதனால்) இனிமேல் வேறுமோ ருண்மையினை வைத்திடவும், அவர்மொழியினைக் கேட்டிடவும் இவ்விடத்து வேறொரு வரும் உளரோ? (இலர் என்பதாம்.)
(வி - ம்.) படிப்பிப்பதன் பொருட்டு படிப்பிப்பதற்கு முன்னமேயே மாணவனைப் பள்ளியிற் சேர்ப்பது போன்றாகும்; உடல் பொருள் ஆவி மூன்றும் ஆட்கொள்ள வேண்டி முன்னரே பெறுதல்.
(77)
இனிய கருப்புவட்டை என்னாவி லிட்டான் | நனியிரதம் மாறாது நானுந் - தனியிருக்கப் | பெற்றிலேன் மோனம் பிறந்தஅன்றே மோனமல்லால் | கற்றிலேன் ஏதுங் கதி. |
(பொ - ள்.) இனிப்புச்சுவைமிக்க கருப்புவட்டை நாவில் வைத்ததும் அதன் இனிப்புச்சுவை மாறுவதுமில்லை; நாவும் அதற்கு வேறாகப் பிரிந்து நிற்பது மில்லை. அதுபோல் மோனகுரு எழுந்தருளி வந்து உரையற்ற என் உணர்வினில் பேரின்ப மோனத்தை வைத்தருளியபின் அப் பேரின்ப மோனமல்லாது புதிதான நிலை ஏதுங் கண்டிலேன்.
(வி - ம்) திருவடியின்கண் ஆருயிர் திருவருளுணர்த்தியவாறே உணர்ந்து கலந்து பிரிவறப்புணர்ந்தபின் அவ்வுயிர்க்கு அப் பேரின்பமேயன்றிப் பிறிதொன்றும் தோன்றாதென்க.
(78)
ஏதுக்குஞ் சும்மா இருநீ எனவுரைத்த | சூதுக்கோ தோன்றாத் துணையாகிப் - போதித்து | நின்றதற்கோ என்ஐயா நீக்கிப் பிரியாமல் | கொன்றதற்கோ பேசாக் குறி. |
(பொ - ள்.) எளியேனுடைய பெரிய முதல்வனே! எல்லாவற்றிற்கும், நீ பேசாக்குறியாகிய மௌனமாக இருப்பாயாக என்று கட்டளையிட்டருளியது நன்மைபயக்கும் சூழ்ச்சிக்கோ, தோன்றாத்துணையாய் மௌனகுருவாய்த் திருக்கோலங்கொண்டெழுந்தருளி வந்து அருமறையாகிய