பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

51

ஒடுங்கும். குணம் தூவாமாயையின் பாரிய திரிபாகிய மூலப்பகுதியில் ஒடுங்கும். இதனால் "விண்ணாதி பூதமெலாம் தன்னகத்தி லடக்கி" என ஓதினர்.

     இக்காரியப்பாடுகள் அனைத்தும் சிவபெருமானின் திருவாணையாகிய அறிவாற்றல் செய் திருக்குறிப்பின்வழி நிகழ்வன. அறிவாற்றல் எனினும் சிற்சத்தி எனினும் ஒன்றே. திருக்குறிப்பு எனினும் சங்கற்பம் எனினும் ஒன்றே. இதனால் அறிவில்லதாகிய பூத முதலியவைகள் பேரறிவுப் பெரும்பொருளாகிய முதல்வனில் ஒடுங்கமென்பார் புன் கொள்கை பொருந்தாமை காண்க.

     "ஞானக்கண்ணால் கண்ட அன்பர்" என்பது திருவடியுணர்வு திருவருளால் கைவரப்பெற்று ஆண்டான் அடிமைத்திறம் பூண்டு எல்லாம் சிவனெனக் கண்டு வாழும் நற்றவ நல்லார் என்க. நல்லார் எனினும் செம்பொருட்டுணிவினர் எனினும் ஒன்றே. செம்பொருட்டுணிவினர் - சித்தாந்தியர்.

     "தானாகச் செய்தருளும் இறை" என்பது சிவபெருமான் செவ்வி நோக்கிச் சிவகுரவனாய் எழுந்தருளிவந்து சிவதீக்கை புரிவித்து ஆட்கொண்டு தானாகச் செய்தருளும் என்க. மானைக் காட்டி மானைப் பிடிப்பதுபோன்று சிவபெருமான் மானுடச் சட்டை சாத்தி எழுந்தருள்வன். இவ்வுண்மை வருமாறு காண்க:

"பரப்பிரமம் இவனென்றும் பரசிவன்தான் என்றும்
    பரஞானம் இவனென்றும் பராபரன்தான் என்றும்
 அரன் றருஞ்சீர் நிலையெல்லாம் இவனே யென்றும்
    அருட்குருவை வழிபடவே அவன்இவன்தான் ஆயே
 இரங்கியவா ரணம்யாமை மீன்அண்டஞ் சினையை
    இயல்பினொடும் பரிசித்தும் நினைந்தும் பார்த்தும்
 பரிந்திவைதாம் ஆக்குமா போற்சிவமே யாக்கும்
    பரிசித்துஞ் சிந்தித்தும் பார்த்துந் தானே."
- சிவஞானசித்தியார், 12. 3 - 5.
(9)
விண்ணிறைந்த வெளியாய்என் மனவெளியிற் கலந்தறிவாம்
    வெளியி னூடுந்
தண்ணிறைந்த பேரமுதாய்ச் சதானந்த மானபெருந்
    தகையே நின்பால்
உண்ணிறைந்த பேரன்பா லுள்ளுருகி மொழிகுழறி
    உவமை யாகிக்
கண்ணிறைந்த புனலுகுப்பக் கரமுகிழ்ப்ப நின்னருளைக்
    கருத்தில் வைப்பாம்.