நின்னையின்றித் தனக்கென ஓர் அன்பும் உண்டோ? (அதனால்) நின் திருவடிக்கு ஆகும் இறவா இன்ப அன்பினைப் பெருமானே இன்னம் பெருகச் செய்தருள்வாயாக. நினைவூடே - நினைவின்கண்.
(3)
பாராயோ என்துயரம் எல்லாம் ஐயா | பகருமுன்னே தெரியாதோ பாவி யேன்முன் | வாராயோ இன்னமொரு காலா னாலும் | மலர்க்காலென் சென்னிமிசை வைத்தி டாயோ. |
(பொ - ள்.) அடியேனுடைய பொறுக்க முடியாத துன்பங்களனைத்தையும் ஒழிக்கும்படி பார்த்தருளாயோ? ஐயனே! எளியேன் வாய்விட்டுச் சொல்லுவதெல்லாம் நின்திருவருட்குத் தெரியாததோ? கொடியேன்முன் மற்றும் ஒருமுறை வந்தருளாயோ? வந்தருளிச் செந்தாமரையனைய நின்திருவடியினை அடியேன் முடியின்மேல் வைத்தருளாயோ? அடிமுடிவைப்பே அருட்பெருந்தீக்கை.1
(4)
வைத்திடுங்கா லைப்பிடித்துக் கண்ணின் மார்பில் | வைத்தணைத்துக் கொண்டுகையால் வளைத்துக் கட்டிச் | சித்தமிசைப் புகஇருத்திப் பிடித்துக் கொண்டு | தியக்கமற இன்பசுகஞ் சேர்வ தென்றோ. |
(பொ - ள்.) அடியேனுக்கு இரங்கி முடியின்கண் வைத்தருளிய திருவடியினைச் சிக்கெனப்பிடித்து இருகண்களிலும் மார்பினிலும் அணைத்துக் கொண்டு, கையினால் வளைத்துக் கட்டி, மனத்தின்ஆக்க நிலை எனப்படும் நாட்டமாகிய சித்தத்தின்கண் பொருந்த வைத்து இறுகப் பிடித்துக்கொண்டு சிறிதும் மயக்கமில்லாமல் பேரின்பப் பெருகலத்தினைப் புணர்ந்து இன்புறுவதெந்நாளோ? கால் - திருவடி. தியக்கம் - மயக்கம். சுகம் - நலம்.
(5)
சேராமற் சிற்றினத்தைப் பிரிந்தெந் நாளுந் | திருவடிப்பே ரினத்துடனே சேரா வண்ணம் | ஆராக நான் அலைந்தேன் அரசே நீதான் | அறிந்திருந்தும் மாயையிலேன் அழுந்த வைத்தாய். |
(பொ - ள்.) தெய்வநாட்டமில்லாத சிற்றினத்தை அறவே நீங்கித் திருவடிப்பேற்றின் நினைவு நீங்காப் பெரியாரினத்துடனே சேர்ந்தொழுகாதபடி அடியேனை யாராக எண்ணிக்கொண்டு யான் அலைந்து திரிந்தேன். இந்நிலையினை அருளரசே! நின்திருவுள்ளம் அறிந்திருந்தும் அடியேனை மாயையின்கண் அழுந்தவைத்தருளினையே!
(வி - ம்.) திருவள்ளுவநாயனார் அருளிய (45) பெரியாரைத் துணைக்கோடலும் (46) சிற்றினஞ்சேராமையையும் ஈண்டு நினைவு கூர்க.
(6)
1. | 'நினைந்துவரும்.' 6. 14-1. |