வைத்தபொருள் உடலாவி மூன்றும் நின்கை | வசமெனவே யான்கொடுக்க வாங்கிக் கொண்டு | சித்தமிசைப் புகுந்ததுதான் மெய்யோ பொய்யோ | சிறியேற்கிங் குளவுரையாய் திகையா வண்ணம். |
(பொ - ள்.) ஈட்டிவைத்த பெரும் பொருளும், மாட்டியுள்ள உடலும், ஆவியும் ஆகிய மூன்றினையும் நின் கையடையாள மென்று அன்புடன் புனல்வார்த்து அடியேன் நின்பால் ஒப்புவிக்க. நீ ஏற்றுக்கொண்டருளி எளியேன் மனத்தின்கண் வீற்றிருந்தருளியதுதான் உண்மையோ? அல்லது பொய்யோ? அடியேன் மயங்கித் திகையாவண்ணம் உட்கிடக்கையினை விளக்கியருள்வாயாக. உளவு - உட்கிடக்கை.
(7)
திகையாதோ எந்நாளும் பேரா னந்தத் | தெள்ளமுதம் உதவாமல் திவலை காட்டி | வகையாக அலக்கழித்தாய் உண்டு டுத்து | வாழ்ந்தேன்நான் இரண்டுகால் மாடு போலே. |
(பொ - ள்.) அடியேன் மனமானது மயங்குதல் செய்யாதோ? எக்காலத்தும் பெரும் பேரின்பமாகிய தெள்ளியஉணர்வமிழ்தை முற்றாகத் துய்க்கத் தந்தருளாது சிறு துளிபோற் காட்டியருளிப் பலவாறாக அலைக்கழிவு செய்தனை; அடியேன் இரண்டுகால் மாடென்று சான்றோர் இகழும்படி உண்டுடுத்துத் திரிவதானேன்.
(8)
மாடுமக்கள் சிற்றிடையார் செம்பொன் ஆடை | வைத்தகன தனமேடை மாட கூடம் | வீடுமென்பால் தொடர்ச்சியோ இடைவி டாமல் | மிக்ககதி வீடன்றோ விளங்கல் வேண்டும். |
(பொ - ள்.) நிலையுதலில்லாத கறவைமாடும், பிள்ளைகளும், சிறிய இடையினை உடைய மாதர்களும், அழகிய பொன்னாடையும் தேடித்தொகுத்து வைத்துள்ள பெருஞ்செல்வமும், மேன்மாடியோடுங் கூடிய வளமனையும் ஆகிய இவை யனைத்தும் விட்டு நீங்குகின்ற அடியேன்பால் தொன்று தொட்டுவரும் தொடர்ச்சியினை உடையனவோ? இடையீடில்லாமல் எவற்றினுக்கும் மேம்பட்டதாய் நிலையுதலை உடையதாயுள்ள நின் திருவடிப் பேறன்றோ நின்திருவருளால் அடியேன்பால் உண்டாகித் திகழ்தல் வேண்டும்? வீசும் - விட்டுநீங்கும். என்பால் - அடியேன்பால்.
(9)
விளங்கவெனக் குள்ளுள்ளே விளங்கா நின்ற | வேதகமே போதகமே விமல வாழ்வே | களங்கரகி தப்பொருளே யென்னை நீங்காக் | கண்ணுதலே நாதாந்தக் காட்சிப் பேறே. |