பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

52

     (பொ - ள்.) "விண்ணிறைந்த . . . . . . தகையே" - ஐம்பூதத்துள் ஒன்றாகிய விண்வெளியும் அடங்கி நிறைதற்குரிய பெருவெளியாகி, அடியேனுடைய மனவெளியினிஞ் சேர்ந்து, அடியேனுடைய அறிவு வெளியின்கண்ணும் செறிந்து, மாறாக் குளிர்ச்சிபொருந்திய பேரமிழ்தாய், எப்பொழுதும் பெரும்பேரின்பப் பெருந்தகையே!

     "நின்பால் . . . . . . வைப்பான்" - (சிவனே உன்) திருவடியின்பால் அகம்நிறைந்த மெய்ம்மைசார் பேரன்பால் நெஞ்சம் நெக்குருகி, நாக்குழறி, உள்ளத்தின்கண் உவகையூற்றெடுத்து, விழிகள் இரண்டிலும் இன்பக்கண்ணீர் பொழியக் கைகள் இரண்டும் உச்சிமேற் குவித்து நின் திருவருளை உள்ளத்தின்கண் இடையறாதுள்கி வைத்து வணங்குவாம்.

     (வி - ம்.) நுண்ணிய பொருள்களெல்லாம் வெளியென்னும் பெயரால் நுவலப்படும். ஐம்பூதங்களுள் நுண்மை வாய்ந்தது விண். அதனால் அது வெளியெனப்படும். அவ்வெளி ஏனை நான்கு பூதங்களுக்கும் இடங்கொடுத்துக்கொண்டு அவற்றுடன் கலந்து நிற்கும். அதுபோல் திருவருள்வெளி மீநுன்மை வாய்ந்தது. அறிவுருவா யுள்ளது. அவ்வெளி அவ்விண்வெளியைத் தன்னகத்தடக்கித் தான் அதனின் மேலாய்க் கலந்து நிற்கும். அதுபோல் அடியேனின் மன வெளிக்கும் வெளியாக மன்னுபவன். எளியேனுடைய அறிவுவெளிக்கும் வெளியாக இயங்குபவன். எனவே இறைவன் திருவாணை யாண்டும் நிறைந்துள்ள பெருவெளி என்க. இவ்வுண்மை வருமாறு காண்க.

- "நெறிகொள்
    வெளியில் வெளியில் வெளியின் வெளியில்"
- நெஞ்சுவிடு தூது, 33.
அன்புடையார்க்கு இயல்பாக நிகழும் குணங்களை வருமாறுணர்க :

"வேர்க்குங்கண் ணீர்ததும்பும் கம்பிக்கு மெய்நடுங்கும்
 வார்த்தை நழுவும். மனம்பதறும் - கார்க்கதமாய்க்
 காந்து முரோமாஞ் சலியாகும் காதலித்தார்க்
 கேய்ந்தகுணங் காணிவையெட்டும்."
- ஒழிவிலொடுக்கம்.
(10)
 
ஆதியந்தங் காட்டாத முதலா யெம்மை
    அடியைக்கா வளர்த்தெடுத்த அன்னை போல
நீதிபெறுங் குருவாகி மனவாக் கெட்டா
    நிச்சயமாய்ச் சொச்சமதாய் நிமல மாகி
வாதமிடுஞ் சமயநெறிக் கரிய தாகி
    மௌனத்தோர் பால்வெளியாய் வயங்கா நின்ற
சோதியைஎன் னுயிர்த்துணையை நாடிக் கண்ணீர்
    சொரியஇரு கரங்குவித்துத் தொழுதல் செய்வாம்.