பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

563

கண்ணாரக் கண்டோர் கருப்பொருள்கா ணாமலருள்
விண்ணூ டிருந்தஇன்ப வெற்பே பராபரமே.
     (பொ - ள்.) (கடவுளே நின்னை நின் திருவருளால்) கண்ணாரக் கண்டு கும்பிட்டோர், பிறப்பு இறப்பு என்னும் பெருந்துன்பத்தைச் சிறிதும் அடையாமல் வாழும்படி செய்தருள்கின்ற திருவருள்வெளியில் எழுந்தருளியிருக்கும் பேரின்பப் பெருமலையே. கருப்பொருள்-பிறப்பு நிலை. விண்-வெளி. அருள்விண்-திருச்சிற்றம்பலம். 'பராபரமே' என்று வருவனவற்றிற்கெல்லாம் முன்னுரைத்ததுபோல் உரைத்துக்கொள்க.

(2)
சிந்தித்த எல்லாமென் சிந்தையறிந் தேயுதவ
வந்த கருணை மழையே பராபரமே.
     (பொ - ள்.) அடியேன் நினைத்தவற்றையெல்லாம் எளியேன் கருத் தறிந்து அருள்செய்யும் பொருட்டு எழுந்தருளிவந்த திருவருள் மழையே.

(3)
ஆரா அமுதே அரசே ஆனந்தவெள்ளப்
பேராறே மோனப் பெருக்கே பராபரமே.
     (பொ - ள்.) தெவிட்டாத தெள்ளமுதே, வேந்தே, பேரின்ப வெள்ளம் நிறைந்த பெரிய ஆறே, பேச்சற்ற மவுன வெள்ளமே.

(4)
ஆரறிவார் என்ன அனந்தமறை ஓலமிடும்
பேரறிவே இன்பப் பெருக்கே பராபரமே.
     (பொ - ள்.) அடிகளே நின் திருவடியினை அறிவார் யாரென்று அளவில்லாத மறைகள் முழங்குகின்றன. தானே விளங்கும் பேரறிவுப் பொருளே; பேரின்பப் பெருவெள்ளமே!

(5)
உரையிறந்த அன்பருளத் தோங்கொளியா யோங்கிக்
கரையிறந்த இன்பக் கடலே பராபரமே.
     (பொ - ள்.) மவுனநிலை எய்திய மெய்யடியார் மனத்தினிடத்தே மங்காத பேரொளியாய் வளர்ந்து எல்லையில்லாத பேரின்பக்கடலே!

(6)
எத்திக்குந் தானாகி என்னிதயத் தேயூறித்
தித்திக்கும் ஆனந்தத் தேவே பராபரமே.
     (பொ - ள்.) எத்திசைகளிலும் நீக்கமற நிறைந்து அடியேன் உள்ளத்தே ஊற்றெடுத்துப் பேரின்பங் கொடுத்துக்கொண்டிருக்கும் குறையா இன்பத்தேனே,

(7)
திக்கொடுகீழ் மேலுந் திருவருளாம் பொற்பறிந்தோர்
கைக்குள்வளர் நெல்லிக் கனியே பராபரமே.