பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

526

     (பொ - ள்.) எட்டுத்திசைகளுடனே நிலத்தினும் வானத்தினும் அகல் நிறைவாகப் பரந்துள்ள நின் திருவருளுண்மையினை மாசறத் தெளிந்தோர் (மெய்யுணர்ந்தோர்) உள்ளங்கையில் விளங்கும் நெல்லிக் கனியே!

(8)
முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே
சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே.
     (பொ - ள்.) முத்தே, பவளமே, மிக்க பசுமை தங்கிய பொன் ஒளியே, பேரறிவே, அடியேன் உள்ளத்துத் தெளிவே!

(9)
கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த
விண்ணேஆ னந்த வியப்பே பராபரமே.
     (பொ - ள்.) அடியேனுடைய கண்ணினும், கருத்தினும், திருத்தமுற எழுந்தருளும் பொன்மரமே, கண்ணிறைந்த திருவருள் வெளியாம் திருச்சிற்றம்பலமே, பேரின்பம் துய்ப்பிக்கும் வியத்தகு பொருளே!

(10)
வாக்காய் மனதாய் மனவாக் கிறந்தவர்பால்
தாக்காதே தாக்குந் தனியே பராபரமே.
     (பொ - ள்.) வாய்ப்பொறியும் மனக்கரணமும் தொழிற்படுமாறு நின்றருளினாய் எனினும் அம் மனமும் சொல்லுங்கடந்த மெய்யடியார் பால் உணர்விற்கு உணர்வாய் நின்று விளங்கும் ஒப்பில்லாத தனிப் பொருளே, 'தாக்காது தாக்குதல்' சுட்டுணர்வு சிற்றுணர்வுகட்குப் புலனாகாது, முற்றுணர்விற்குப் புலனாதல். பொறி - இந்திரியம்.

(11)
பார்த்தஇட மெல்லாம் பரவெளியாய்த் தோன்றவொரு
வார்த்தைசொல்ல வந்த மனுவே பராபரமே.
     (பொ - ள்.) கண்டவிடமெல்லாந் திருச்சிற்றம்பலமாய்த் தோன்றுமாறு ஒப்பில்லாத "சிவசிவ" என்னும் பெருமறை செவியறிவுறுத்த வந்தருளிய மந்திர வடிவே! பெருமறை-ஒரு வார்த்தை. மனு-மந்திரம். செவியறிவுறுத்தல்-உபதேசித்தல்.

(12)
வானந்த மண்ணினந்தம் வைத்துவைத்துப் பார்க்கஎனக்(கு)
ஆனந்தம் தந்த அரசே பராபரமே.
     (பொ - ள்.) வானத்தின் முடிவும், நிலத்தின் முடிவும் தேவரீர் நிறைவினை நோக்கி நோக்கி அடியேன் கண்டு கும்பிட அருளிய பெருவேந்தே! "பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர், போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிவே" என்றபடி சிவபெருமானின் திருவடியும் திருமுடியும் என்றலுமாம்.

(13)
அன்பைப் பெருக்கிஎன தருாயிரைக் காக்கவந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே.