(பொ - ள்.) இறவாத இன்ப அன்பினைப்பெருக்கி, அடியேனின் ஆருயிரைக் காத்தருளவந்த பேரின்பப் பெருக்கே, பேராத்தலைவனே; இறை-தலைவன்.
(14)
வானமெல் லாங்கொண்ட மௌனமணிப் பெட்டகத்துக் | கானபணி யான அணியே பராபரமே. |
(பொ - ள்.) அறிவு வெளிமுற்றும் தன்னுள்ளே வைத்தருளிய மவுன நிலைசேர் அழகிய பேழையினிடத்து வைக்கத் தகுந்த சிறந்த அணிகலமே! பெட்டகம்-பேழை. பணி-அணிகலம்; நகை.
(15)
ஓடும் இருநிதியும் ஒன்றாகக் கண்டவர்கள் | நாடும் பொருளான நட்பே பராபரமே. |
(பொ - ள்.) உடைந்த மண்ணோடும் வீட்டினைமூடும் வியன் ஓடும் பெரும்பொருளும் (வேண்டத்தக்க மாயா காரியப் பொருள்களே, பயன்தரு முறையினை நோக்கின் மயலாற்கொள்ளும் உயர்வு தணிவு கூறுதற்கில்லை) ஒப்ப நோக்கிப் பயன்கொள்ளும் விறலினராகிய மெய்யுணர்ந்தார் நாடத்தகுந்த நற்பொருளாகிய நட்பே!
(16)
சித்த நினைவுஞ் செயுஞ்செயலும் நீயெனவாழ் | உத்தமர்கட் கான உறவே பராபரமே. |
(பொ - ள்.) மனத்தின்கண் தோன்றும் நினைவும் அதன் வழியாகச் செய்யப்படும் செயலும் (தேவரீர் திருவாணையின்றி நிகழாமையின் அவையும்) நின் கட்டளையே என்று நின்னை மறவா நினைவுடன் வாழும் தலையானவர்களுக்குத் தகுதியான சுற்றமே!
(17)
போதாந்தப் புண்ணியர்கள் போற்றிசய போற்றியெனும் | வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே. |
(பொ - ள்.) மெய்யுணர்வுக்கொழுந்தாக விளங்கும் சிவபுண்ணியப் பேற்றினர் செந்தமிழ் மறையாம் போற்றி வெல்க போற்றியென்று பூத்தூவி வழிபடும் இடம் மறை முடிவாம் நிலைக்களமாகும்; அந் நிலைக்களமான வீட்டினுக்கு ஏற்றிவைத்த திருவருள் விளக்கே!
(18)
முத்தாந்த வீதி முளரிதொழும் அன்பருக்கே | சித்தாந்த வீதிவருந் தேவே பராபரமே. |
(பொ - ள்.) வீடுபேற்றின்ப வீதிவளாகத்தினுள் தேவரீர் திருவடித் தாமரையினைத் தொழுகின்ற மெய்யன்பர்களின் பொருட்டுச் செம்பொருட்டுணிவாம் சித்தாந்த வீதியினில் திருவுலாக்கொள்ளும் முழுமுதற்றெய்வமே!
(19)
ஈனந் தருமுடலம் என்னதுயான் என்பதற | ஆனந்தம் வேண்டி அலந்தேன் பராபரமே. |
(பொ - ள்.) இழிவினையுண்டாக்கும் இவ்வுடம்பு என்னதென்றும் யானென்றும் சொல்லி இறுமாக்கும் இருவகைச் செருக்கும் அற்றொழியும்படி