பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

529

சொல்லால் அடங்காச் சுகக்கடலில் வாய்மடுக்கின்
அல்லால்என் தாகம் அறுமோ பராபரமே.
    (பொ - ள்.) (மவுன நிலையில் உணர்வின்கண் அறிவதல்லாமல்) சொல்லினாற் சொல்லுதற்கரிய பேரின்பப் பெருங்கடலில் வாய்வைத்துப் பருகினாலல்லாமல் அடியேனுடைய வீடுபேற்று வேட்கை நீங்குமோ? தாகம்-விடாய்.

(27)
பாராயோ என்னைமுகம் பார்த்தொருகால் என்கவலை
தீராயோ வாய்திறந்து செப்பாய் பராபரமே.
    (பொ - ள்.) (சிவகுருவாகத் திருக்கோலங்கொண்டெழுந்தருளி வந்து) அடியேனைக் கண்கூடாக நோக்கிப் பார்த்தருளாயோ? அம் முறையாகத் திருநோக்கம் ஒருகால் புரிந்தருளி, அடியேன்படுந் துன்பத்தை நீக்கியருளாயோ? திருவாய் மலர்ந்தருள்வாய்.

(28)
ஓயாதோ என்கவலை உள்ளேஆ னந்த வெள்ளம்
பாயாதோ ஐயா பகராய் பராபரமே.
    (பொ - ள்.) ஐயனே! அடியேன் கவலை ஓய்ந்தொழியாதோ? திருவருளால் உணர்வினுள்ளே பேரின்பப்பெருவெள்ளம் பாயாதோ? பகர்ந்தருள்வாயாக.

(29)
ஓகோ உனைப்பிரிந்தார் உள்ளங் கனலில்வைத்த
பாகோ மெழுகோ பகராய் பராபரமே.
    (பொ - ள்.) ஐயோ! தேவரீரைப் பிரிந்த மெய்யடியார்தம் உள்ளம் தழலிலிட்ட வெல்லப்பாகோ? அல்லது மெழுகோ? திருவாய் மலர்ந்தருள்வாயாக.

(30)
கூர்த்தஅறி வத்தனையுங் கொள்ளைகொடுத் துன்னருளைப்
பார்த்தவன்நான் என்னைமுகம் பாராய் பராபரமே.
    (பொ - ள்.) அடியேனுடைய கூர்மையான அறிவு முழுதினையும் தேவரீருக்குக் கொள்ளையாகக் கொடுத்து, தேவரீர் திருவருளொன்றனையே பார்த்து நிற்பவன் எளியேன்; ஏழையேன் முகம் பார்த்தருள்வாயாக.

(31)
கடலமுதே தேனேயென் கண்ணே கவலை
படமுடியா தென்னைமுகம் பார்நீ பராபரமே.
    (பொ - ள்.) பாற்கடலமுதே, தேனே, அடியேன் கண்ணே, என்னால் இனியும் மனக்கவலையினைப் பொறுக்க முடியாது; எளியேன் முகத்தைப் பார்த்தருள்வாயாக.

(32)
உள்ளம் அறிவாய் உழப்பறிவாய் நான்ஏழை
தள்ளிவிடின் மெத்தத் தவிப்பேன் பராபரமே.