பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


539


நின்றருளுகின்றாயே, அந்நிலையில் அடியேன் நினக்கு வேறோ? நின்னைத்தனித்து நினைக்குமாறு எப்படி? திருவாய் மலர்ந்தருள்வாயாக. வேறாம் பொருளை விழைந்து நினைப்பருடன் கூறாதற் கேதுன்னல் கூறு.

(85)
நின்போதத் தாலே நினைப்பு மறப்புமென்றால்
என்போதம் எங்கே இயம்பாய் பராபரமே.
     (பொ - ள்) தேவரீருடைய பேரறிவு இயைந்து இயக்கியருள்வதாகிய துணையினால் அடியேனுக்கு நினைப்பு மறப்பு முண்டாகின்றன என்றால், எளியேனுடைய சிற்றறிவுக்கு என்ன முதன்மையுள்ளது? இயம்பியருள்வாயாக.

(86)
ஒன்றைநினைந் தொன்றைமறந் தோடுமனம் எல்லாம்நீ
என்றறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே.
     (பொ - ள்) மனத்தின் இயல்பு உலகியற் பொருள்களில் ஒன்றைப் பற்றிக்கொண்டு அதனையே நினைந்து மற்றவற்றினின்றும் நீங்குந்தன்மையுடையது. அனைத்தும் நின்னுடையனவே, நின்னையன்றி வேறொன்றனையும் தனித்துக் காண்பதற்கில்லை என்றறிந்தால் பின் எவ்விடம் சென்றியங்கும்?

(87)
கொழுந்தில் வயிரமெனக் கோதறவுள் ளன்பில்
அழுந்துமவர்க் கேசுகமுண் டாகும் பராபரமே.
     (பொ - ள்) கொழுந்தின்கண் மரத்தின் முற்றிய நிலையாகிய வயிரம் வெளிப்படாது அடங்கி நிற்பது போன்று குற்றமற்ற இறவாத இன்பத்துக்கு ஏதுவாகிய உள்ளன்பின்கண் அழுந்தி அடங்கி நிற்பவர்கட்கே பேரின்பப் பெருவாழ்வுண்டாம்.

(88)
பற்றும் பயிர்க்குப் படர்கொழுந்து போற்பருவம்
பெற்றவர்க்கே நின்னருள்தான் பேறாம் பராபரமே.
     (பொ - ள்) கணுக்களுக்குக் கணுவாக மேலோங்கிக் கொழுந்து விட்டு வளரும் புற்பயிர்களைப் போன்று, செவ்விவாய்ந்த ஆருயிர்கட்கே நின் திருவருட்பேறுண்டாகும். செவ்வி - பரிபக்குவம்.

(89)
யோகியர்க்கே ஞானம் ஒழுங்காம்பே ரன்பான
தாகியரும் யோகம்முன்னே சார்ந்தோர் பராபரமே.
     (பொ - ள்) அகத்தவச் சிவச் செறிவினர்க்கு திருவடியுணர்வொழுக்கமாகிய சிவஞானம் கைகூடும். கண்ணப்பர் போன்று மிக்க அன்புடையவர்கட்குச் சிவச்செறிவாகிய சிவராசயோகம் முன்னமே கைகூடிற்றென்க.

(90)
அல்லும் பகலும் அறிவாகி நின்றவர்க்கே
சொல்லும் பொருளுஞ் சுமைகாண் பராபரமே.