(பொ - ள்) இரவும் பகலும் திருவருளால் திருவடியுணர்வாகவே நின்றவர்கட்குச் சொல்லும் அதனால் பெறப்படும் பொருளும் (அழுக்காடைபோன்று) அருவருப்பும் பெருஞ்சுமையுமாகத் தோன்றும். அதனால் அவர்கள் எப்பொழுதும் மவுனமாகவே யிருப்பர்.
(வி - ம்) கதவைத் திறந்தால் ஆங்குள்ள பொருள் நாட்டமும் பின் பூட்ட வேண்டுமென்னும் இன்றியமையாமையும் நேர்வன போன்று மவுனங்கைவிட்டால் துன்பமுண்டாகும்.
(91)
எச்சிலென்று பூவை யிகழ்ந்தோர்க் குனைப்போற்றப் | பச்சிலையுங் கிள்ளப் படுமோ பராபரமே. |
(பொ - ள்) (உண்பதன் முன்னம் மலர் பறித்திட்டுண்ண வாயாதபோது) நறுமணப்பூக்களை வண்டின் எச்சிலென்று அப் பூவைப் புறக்கணிப்போர்க்கு நின்வழிபாட்டின் பொருட்டுப் பச்சிலையுங் கிள்ளுதல் பொருந்துமோ?
(வி - ம்) உமிநீக்கி அரிசியாக்கி, அரிசியட்டுச் சோறாக்குவது போன்று பூவும் பச்சிலையும் பொருந்தக் கொண்டு திருவைந் தெழுத்தாம் மெய்யுணர்வுப் புனம் தெளித்து1 அவற்றைத் தூய்மையாக்கிப் போற்றி மந்திரம் புகன்று வழிபடுதல் வேண்டுமென்பதாம்.
(92)
அந்தக் கரணம் அடங்கத் துறப்பதுவே | எந்தத் துறவினும்நன் றெந்தாய் பராபரமே. |
(பொ - ள்) எந்தையே! எண்ணம் மனம் எழுச்சி இறுப்பு என்னும் அந்தக்கரணங்கள் நான்கும் முற்றாக ஒடுங்குவதே எல்லாத் துறவினும் நன்மைமிக்க நற்றுறவாகும். அந்தக்கரணம்: சிந்தை, மனம், அகங்காரம், புத்தி என நான்கு.
(93)
தன்னை அறிந்தால் தலைவன்மேற் பற்றலது | பின்னையொரு பற்றும்உண்டோ பேசாய் பராபரமே. |
(பொ - ள்) (விளக்கொளியின் துணையால் கண்ணொளி கண்டு பின் கண்ணொளி அவ் விளக்கொளியின் கலப்பால் விளக்கொளியினைக் காண்பது போன்ற முறைமையே) திருவருளால் தன்னையறிந்த மெய்யடியார்கள், தன்னையறிவித்த தலைவன்பால் பற்று வைத்து ஒழுகுவதல்லது பின்னுமொரு பற்று முண்டோ? திருவாய் மலர்ந்தருள்வாயாக.
(94)
அன்பாற் கரைந்துகண்ணீர் ஆறுகண்ட புண்ணியருக் | குன்பால் வரவழிதான் உண்டோ பராபரமே. |
(பொ - ள்) (கண்ணப்பர் போன்று அளவிறந்த) மெய்ப்பேரன்புடையார் உள்ளம் உருகிக் கண்ணீர் ஆறாகப் பெருக நிற்பர்; (அவர் தமக்கு அந்நிலையினின்றும் நீங்கி வேறொன்று எய்தவேண்டுமென்னும்
1. | 'வாவிவாய்த்.' 3 - 26 - 3. |