எண்ணம் உண்டாகாது அதனால்) அப் புண்ணியப் பேறுடையார்க்கு நின்பால் வருவதற்கு வழிதானுண்டாமோ? (உண்டாவதரிதென்ப.)
(வி - ம்) கண்ணப்ப நாயனார் ஒருவரே, திண்மைசேர் பேரன்பினர்; அவர் திருவருளால் அன்பே வடிவமாய்த் திகழ்ந்தவர். அவர் தமக்கு அவ்வன்பினையன்றி வேறொன்றுந் தோன்றவில்லை. அதனால் அவர் தம்மை மறந்தார். திருவடியும் வேண்டிலர், திருவடிக்காம் திருத்தொண்டினையே வேண்டினர். விழைந்து, விரைந்து, புரிந்தனர். மேலும் அன்பினால் பாலூட்டுந்தாய் அப்பொழுது சேயின்பால் பருகுதலொன்றனையே குறிக்கொள்வள். விதைத்தவர் முதற்கண் முளை தோன்றுதலையே நோக்குவர். இவைபோன்று பேரன்பினர் அன்பின் செயலொன்றையே நோக்குவர்.
(95)
தன்னை அறிந்தருளே தாரகமா நிற்பதுவே | உன்னை அறிதற் குபாயம் பராபரமே. |
(பொ - ள்) - (திருவருளால் தான் திருவடிக்கு நீங்கா அடிமை என்னும் உண்மையினை உணர்தலே ஒருவன் தன்னை உணர்தலாம்) தன்னையறிந்து தன்னைத் தாங்கும் நிலைக்களமாக என்றும் நீங்காது உடனாய் நிறைந்து நிற்கும் திருவருளே (கண்ணொளி விளங்கவும் பொருள் புலனாகவும் துணையாக நிற்கும் விளக்கொளி போன்று) நின் திருவடியினை யுணர்தற்குத் துணையாகும். அதன் வண்ணமாய் நிற்பதே வழியாகும் நின்னையுணர்தற்கு என்க.
(96)
கற்றகலை யால்நிலைதான் காணுமோ காண்பதெல்லாம் | அற்றவிடத் தேவெளியாம் அன்றோ பராபரமே. |
(பொ - ள்) -உலகியற் கல்வியறிவால் திருவடிநிலையாம் உண்மைப் பேறு அறியப்படுமோ? சுட்டியுணரப்படும் உலகியற் பொருள் நோக்கம் அற்றவிடத்தல்லவா உண்மைப் பொருளின் திருத்தோற்றம் வெளியாகும்?
(வி - ம்) கண்ணப்ப நாயனார்க்கு உலகியற் பொருட்டோற்றம் அற்றதும் குடுமித்தேவரின் திருவடித்தோற்றமுற்றதும் இங்கு நினைவுகூர்தல் வேண்டும்.
(97)
கண்மூடிக் கண்விழித்துக் காண்பதுண்டோ நின்னருளாம் | விண்மூடின் எல்லாம் வெளியாம் பராபரமே. |
(பொ - ள்) - கண்ணைமூடி உள்குதலும் கண்ணை விழித்து உள்குதலும் ஆதிய இருவகைத் தியானங்களாலும் சிவபெருமானே, நின் திருவடியினைக் காணுதல் இயலாது. உன்னுடைய திருவருளாம் அறிவுப் பெருவெளி வெளிப்பட்டு அடியேன் அதனுள் அடங்குவேனாயின் நின் திருவடியினைக் காணுதல் இயலும்.
(வி - ம்) திருவூருக்குச் செல்லும் வழியினை அறிவதொக்கும் தியானம் செய்தல். அவ் வழியினை மன மகிழ்வுடன் நடப்பதொக்கும் திருவருளினுள் அடங்குதல்.
(98)