பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

548
    (பொ - ள்.) (மார்க்கண்டேய முனிவர் செந்நெறிச் செல்வர். சிவபெருமான் திருவடி வழிபாட்டினர். மார்க்கண்ட முனிவரைக் கைப்பற்றிக் கொண்டுசெல்ல அறியாது வந்த நமன்தூதர்பட்ட பெரும்பாட்டை நோக்கி எண்ணிப்பார்க்கின் அடியேங்கட்கு எவ்வகையான அச்சமும் உண்டாவதற்கில்லை.

    (வி - ம்.)நற்றமிழ் நன்னெறி நல்லாராம் திருவள்ளுவநாயனார், தாமருளிய செந்தமிழ்ப் பொதுமறை எனப்படும் திருக்குறளின்கண் "கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின், ஆற்றல் தலைப்பட்டவர்க்கு" (269) என ஓதியருளினர். அத் திருமறைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது மார்க்கண்டேயர் திருவரலாறொன்றேயாம். சிவபெருமான் காலனை உதைத்தது சிவனடியாரைக் கண்டால் அவனும் அவன் தூதரும் அஞ்சியகலவேண்டு மென்னும் அச்சவுணர்வு உண்டாதற்கேயாம். 1

(128)
சுட்டியுண ராமல் துரியநிலை யாய்வெளியில்
விட்டநின்னை யானோ வியப்பேன் பராபரமே.
    (பொ - ள்.) (உலகியற் பொருட்களைச் சுட்டியுணரப்படும் நிலை ஒருவர்க்கு ஏற்பட்டால் அது பிறப்பிற்கு வித்தாகும்.) சுட்டியுணரப்படும் முன்னிலை யுணர்வில்லாத அறிவுவெளி யெனப்படும் துரியநிலையாகிய வெளியில் அடியேனை விட்டருளிய நின் தண்ணளியை அடியேனோ வியக்குந்தன்மையன்? (விண்ணோர் வியத்தல்வேண்டுமென்பதாம். சுட்டியுணர்தல்: பற்றுக்கொண்டு நோக்குதல்.)

(129)
சூதொன்று மின்றியென்னைச் சும்மா இருக்கவைத்தாய்
ஈதொன்றும் போதாதோ இன்பம் பராபரமே.
    (பொ - ள்.) பிறப்பிற் கேதுவாம் வஞ்சகம் சிறிதும் இல்லாதபடி அடியேனை மவுனநிலையில் உறைத்து நிற்கும்படி வைத்தருளினை, திருவடிப்பேரின்பம் எய்துதற்கு இந்நிலை யொன்றும் போதாதோ? (போதும் என்பதாம்.)

(130)
வாயொன்றும் பேசா மவுனியாய் வந்தாண்ட
தேயொன்றும் போதாதோ இன்பம் பராபரமே.
    (பொ - ள்.) வாய்பேசாத மோனநிலையாக எழுந்தருளிவந்து அடியேனை ஆண்டருளியதே இன்பமெய்தப் போதாதோ? (போதும் என்பதாம்.)

(131)
என்று மிருந்தபடிக் கென்னை யெனக்களித்த
தொன்றும்போ தாதோ உரையாய் பராபரமே.
    (பொ - ள்.) எக்காலத்தினும் புலன்நுகர்ச்சியிற் செல்லாமல் நின்திருவடியின்பிற் செல்லுமாறு அடியேனை நிறுத்தி அடியேனுக்கு அவ்வின்பினைத் தந்தருளிய தொன்றுமே போதாதோ?

(132)
 1. 
'வேலைமலி' 2. 48 - 5.