பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


549


எண்திசைக்கீழ் மேலான எல்லாம் பெருவெளியாக்
கண்டவிடத் தென்னையும்நான் கண்டேன் பராபரமே.
     (பொ - ள்) எட்டுத்திசைகளும், கீழும், மேலும் நின்திருவருள் வெளியில் நிற்பக் கண்டவிடத்துத் திருவருளால் அடியேனையும் யான் காணப்பெற்றேன்.

(133)
பித்தனையே தும்மறியாப் பேதையனை ஆண்டவுனக்
கெத்தனைதான் தெண்ட னிடுவேன் பராபரமே.
     (பொ - ள்) பித்தனும் உண்மை ஏதும் அறியுந்திறமையில்லாத பேதையனுமாகிய அடியேனை ஆண்டருளிய நின் திருவடிக்கு எத்தனை முறை வீழ்ந்து வணங்கிப் பணிந்தாலும் போதுமான தாகாது.

(134)
தாயர்கர்ப்பத் தூடன்னமுந் தண்ணீருந் தந்தருளும்
நேயவுனை யாரோ நினையார் பராபரமே.
     (பொ - ள்) அருந்தவத்தாயின் வயிற்றிற் பொருந்திய கருப்பையில் அடியேன் உறையுங்கால் வேண்டுமளவு சோறுந் தண்ணீரும் தந்தருளிப் போற்றிய பேரன்பினனே! நாயனீரை நினையாதிருப்பார் எவருளர்? (ஒருவரும் இலர் என்பதாம்.)

(135)
விரிந்த மனமொடுங்கும் வேளையில்நா னாகப்
பரந்தஅருள் வாழி பதியே பராபரமே.
     (பொ - ள்) இறைவனே! அடியேன் மனம் வெளிமுகப்பட்டு விரிந்து புலன்வழிச் சென்றநிலை நீங்கித் திருவருளால் அகமுகப்பட்டுக் குவிந்து திருவடியினையே ஊன்றி நின்ற நிலையில் திருவருள் நான் என முன்வந்து நின்றது. அந்தப் பரந்த அருட்பொருள் வாழ்கவென வழுத்துகின்றேன்.

(136)
சிந்தனைபோய் நானெனல்போய்த் தேக்கஇன்ப மாமழையை
வந்து பொழிந்தனைநீ வாழி பராபரமே.
     (பொ - ள்) உலகியல் நினைவு அடியேனுக்கு முற்றும் நீங்கி, யான் என்னும் செருக்குத் தலைகாட்டாதொழிந்து, அடியேன் அடங்கு நிறைவு (வியாப்பியம்) முற்றும் நின்திருவடிப்பேரின்பப் பெருமழை தேக்குமாறு வந்து பொழிந்தருளிய நின்பேரருள் வாழ்க.

(137)
தந்தேனே ஓர்வசனந் தந்தபடிக் கின்பமுமாய்
வந்தேனே யென்றனைநீ வாழி பராபரமே.
     (பொ - ள்) (செம்பொருட்டுணிவின் ஒரு மொழியாம் "சிவ சிவ" என்னும் பெரு மொழியெனப்படும்) ஒரு மொழி அருமறையினைச் செவியறிவுறுத்தினவனே என்றருளும் முறைப்படி பேரின்பமாகவும் வந்தேனே என்றருளினை. நின்திருவருள் வாழ்க. செவியறிவுறூஉ-உபதேசம்.

(138)