பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


554


மூர்த்திதலந் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர்
வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே.
     (பொ - ள்) (அன்பர் உய்யும் பொருட்டு அவர் வேண்டு கோளுக்கிணங்கிச் சிவபெருமான் திருவருளாலாகிய திருவுருக் கொண்டருள்வன்.) அத்தகைய மூர்த்தியும், அத் திருவுருவின் நினைவாகக் கொள்ளப்பட்டு வழிபடப்பட்டுவரும் மூர்த்தி விளங்கும் திருவூரும் (தலம்) அத் திருவூரின்கண் காணப்படும் தூய நீர்நிலையாகிய தீர்த்தமும் முறையாகக் கண்டு கும்பிட்டு வழிபடுதலும், சில நாளேனும் உறைந்து, தீர்த்தமாடுதலும் செய்தொழுகுவார்க்கு அருமறையாகிய ஒப்பிலா மொழியெனப்படுஞ் செந்தமிழ்த் திருவைந்தெழுத்தை உணர்த்த நன்னெறி நற்குரு திருவருளால் வந்து வாய்த்தருள்வர்.

(156)
விரும்புஞ் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ பராபரமே.
     (பொ - ள்) உய்யுநெறி வேண்டுவார் அனைவராலும் பெரிதும் விரும்பப்படும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நன்னெறி நாற்படியும் (ஒன்றன்மே லொன்றாய்ப் பெருகி வளர்ந்து முதிர்ந்து முறுகிக் கனியாவது போன்று) அரும்பு, மலர், காய், கனிபோல் காணப்படுமன்றோ?

     (வி - ம்) சீலம்1 - சரியை. நோன்பு - கிரியை. செறிவு - யோகம். அறிவு - ஞானம். இவை நான்கும் நற்றவம் எனப்படும். இவற்றால் இறைவன் திருவடியின் நிறைவு எளிதினெய்தும்.

(157)
தானந் தவந்தருமஞ் சந்ததமுஞ் செய்வர்சிவ
ஞானந் தனையணைய நல்லோர் பராபரமே.
     (பொ - ள்) சிவபெருமானின் திருவடியுணர்வைப் பெறும் பொருட்டு நல்லவர் எப்பொழுதும் மெய்யடியார்கட்கு வழங்கும் தானமும், ஐம்புலனொன்றிச் செய்யப்படும் சிவ வழிபாடாகிய தவமும், உலகியலுதவியாகிய அறமும் செய்தொழுகுவர்.

(158)
சொன்னத்தைச் சொல்லித் துடிக்கின்ற ஆணவப்பேய்க்
கின்னல் வருவதெந்நாள் எந்தாய் பராபரமே.
     (பொ - ள்) ஆணவமுனைப்பானது சினமிகுந்து சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லும்படி செய்யும்; அத்தகைய ஆணவப் பேயின் வலியடங்குவதே அதற்குத் துன்பம்; அத்தகைய துன்பம் அதற்கு நிகழ்வது எந்த நாளிலோ?

(159)
இன்றோ இருவினைவந் தேறியது நானென்றோ
அன்றே விளைந்ததன்றோ ஆற்றேன் பராபரமே.
 
 1. 
'சீலமின்றி' 8. ஆனந்தமாலை - 3.