(பொ - ள்) அடியேனால் செய்யப்பட்டுப் பயன்தரும் பொருட்டுத் தொடர்ந்து நிற்கும் நல்வினை தீவினைகளாகிய இருவினைகளும் இன்றுதான் வந்து என்பால் ஏறியது? யான் என்று உள்ளேனோ அன்றேயன்றோ? அதனால் அவற்றை அடியேன் இன்னும் பொறுக்க முடியாதென்க.
(160)
எண்ணமுந்தான் நின்னைவிட இல்லையென்றால் யான்முனமே | பண்ணவினை யேது பகராய் பராபரமே. |
(பொ - ள்) (தேவரீர் அறிவித்தாலன்றி அடியேனுக்கு அறிவு) விளங்குவதற்கில்லை.) அந்நிலையில் எளியேன்பால் ஏதாவது எண்ணந் தோன்றினால் அதுவும் நின்திருவாணையேயாம்; அதனால் அடியேனுக்கு எனத் தனியாக முன்னே யான் செய்யும் வினையேது? திருவாய் மலர்ந்தருள்வாயாக.
(வி - ம்) பள்ளி மாணவர் ஆசான் முன்னிலையில் பள்ளிக்கூடத்திலிருக்கும்போதே ஆசான் ஆணைக்கு அஞ்சி அடங்கி ஒழுங்காய்ப் பாடம் படித்தொழுகுவதும், அங்ஙனமில்லாமல் படியாதிருப்பதும், விளையாடுவதும், முற்றும் மாறாகக் குறும்பு செய்து பிறரைத் துன்புறுத்துவதும் நிகழ்த்தக் காண்கின்றோமன்றோ? அதுபோல் கடவுள் திருமுன்னில் கடமையாற்றுபவர் பணியும், கடமை மீறியவர் வினையும் நிகழும். மாணவர் தம் செயலுக்கு ஏற்றவாறு பரிசும், பரிசு பெறாமையும், தண்டனையும் அடைவது போன்று ஆருயிர்களும் வினைக்கீடான பயனைத் திருவாணைவழி ஏற்கும்.
(161)
என்னைஇன்ன தென்றறியா ஏழைக்கும் ஆகெடுவேன் | முன்னைவினை கூடல் முறையோ பராபரமே. |
(பொ - ள்) ஆருயிராகிய என்னை ஆணவமறைப்பினால் யான் இன்னதன்மையினை உடையேனென்று அறியமுடியாத நிலைமையில் அறிவு விளங்காப் பேதையென்பால் முன்வினை வந்து கூடுதல் முறையாகுமோ?
(வி - ம்) பின்விளைவறியாது சிறுபிள்ளை மற்றோர் சிறுபிள்ளையைத் துன்புறுத்தினால் அச் சிறுபிள்ளை தண்டனையடையாது போகுமோ? அதுபோற்றான் வினைப்பயனுக்குத் தண்டனை வருவதும் ஆறறிவு விளங்குதற்குரிய, மக்கட் பிறப்பிற்கு வந்தபின்றான். வினைப் பாகுபாடும், பயனும் ஏனைவிலங்கு முதலிய பிறவிகட்கு இன்றென்ப.
(162)
அறியாநான் செய்வினையை ஐயாநீ கூட்டுங் | குறியே தெனக்குளவு கூறாய் பராபரமே. |
(பொ - ள்) பின்விளைவறியாது அடியேன் செய்துள்ள இரு வினைப்பயன்களை விழுமிய முழு முதல்வனாகிய ஐயனே, நீ அடியேனுக்குக் கூட்டுந் திருக்குறிப்பு யாது? அதற்குரிய உளவினைத் திருவாய்மலர்ந்தருள்வாயாக.