பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


556


     (வி - ம்) காய்ந்த மடல் முதலியவற்றைப் பதப்படுத்த நீரில் ஊறப் போடுவதும், பதப்படுத்தப்பட்ட அரிசி காய் கீரை முதலியவற்றை உணவாக்கி யுண்ண நீருலைப் பெய்து வேக வைப்பதும் போன்று ஆருயிர்களை நன்னெறிப்படுத்த வினைப்பயன்களைக் கூட்டுவிப்பதே திருக்குறிப்பாகும்.

(163)
என்னைக் கெடுக்க இசைந்த இருவினைநோய்
தன்னைக் கெடுக்கத் தகாதோ பராபரமே.
     (பொ - ள்) அடியேனைக் கெடுக்க வந்து பொருந்தும் இருவினை நோயைத் தேவரீர் கெடுத்தருளத் திருவு.ள்ளங் கொள்ளுதல் தகுதியாகாதோ?

(164)
வல்லமையே காட்டுகின்ற மாமாயை நானொருவன்
இல்லையெனில் எங்கே இருக்கும் பராபரமே.
     (பொ - ள்) உலக மயக்கினுள் அடியேனை ஆழ்த்தும் பெரிய மாயையினுக்குத் திருவருளால் அடியேன் திருவடியிற் கலந்துவிட்டால் வேறு இருப்பிடம் எங்கே?

(165)
முக்குணத்தால் எல்லாம் முளைக்கப் பிரகிருதிக்
கிக்குணத்தை நல்கியதார் எந்தாய் பராபரமே.
     (பொ - ள்) அறிவு ஆட்சி அழுந்தல் என்னும் மாயா காரியக் குணங்கள் மூன்றானும் உலகியற் புலனின்பம் உண்டாகின்றன. இஃதுண்டாமாறு மான் எனப்படும் பகுதி மாயைக்கு இக்குணங்களைக் கொடுத்தவர் யாவர்? எந்தையே!

     (வி - ம்) நீருக்குத் தண்மையும் தீயினுக்கு வெம்மையும் இயல்பாவது போன்று பகுதி மாயைக்கு முக்குணம் இயல்பாமென்க. அறிவு - சாத்துவிகம். ஆட்சி - இராசதம். அழுந்தல் - தாமதம். ஒரு புலனை அறிந்து தேடி அனுபவித்தல் முக்குணப்பண்பாம். அழுந்தல் - அனுபவித்தல்.

(166)
ஆற்றப் படாதுதுன்பம் ஐயஎன்னால் என்மனது
தேற்றப் படாதினிஎன் செய்வேன் பராபரமே.
     (பொ - ள்) ஐயனே! அடியேனால் துன்பம் பொறுக்க முடியாத அளவில் மிகுதியாகவுள்ளது. எளியேன் மனம் தெளிவிக்க முடியாமலுமிருக்கின்றது. ஏழையேன் இனி யென் செய்குவேன்?

(167)
பூராய மாய்மனதைப் போக்கஅறி யாமல்ஐயோ
ஆராய் அலைந்தேன் அரசே பராபரமே.
     (பொ - ள்) திருவடியில் வைக்கும் பெருவிருப்பால் அடியேன் மனத்தினை அடக்கிச் செலுத்த அறியாமல், ஐயோ! எளியேன் பாரென்றிகழும்படி அலைந்து நொந்தேன்; வேந்தே. பூராயம்-விருப்பம்; உள்குதல்.

(168)