பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

573
அருளாகி நின்றசுகம் ஆகாமல் ஐயோ
இருளாகி நிற்க இயல்போ பராபரமே.
     (பொ - ள்) திருவருளால் அடியேன் திருவருள் வடிவாய்த் திகழும் நின்பேரின்பப் பெருமலையாக ஆகாமல், ஐயோ, ஆணவவயப்பட்டு இருளாகி நிற்றல் எளியேனுக்கு இயல்போ? (இல்லையென்பதாம்.)

     (வி - ம்.) ஒளியின்முன் இருள் ஒளிந்துகொள்ளும். ஆசான் முன் மாணவனின் அறியாமை அகன்றுவிடும். அதுபோல் நின்திருவடியினையே ஒல்லும்வகை ஓவாது நினைந்துருகும் அடியேன் அறியாமை இருளாகி நிற்பது எங்ஙனம் பொருந்தும்? மேலும் மருத்துவத் தலைவன் தரும் நன்மருந்து உண்டபின்னும் நோய் நிற்பது என்பது எவ்வாறு பொருந்தும்? பொருந்தாதென்க.

(253)
 
அன்பெரெல்லாம் இன்பம் அருந்திடவும் யான்ஒருவன்
துன்புறுதல் நன்றோநீ சொல்லாய் பராபரமே.
     (பொ - ள்) முப்பொறியால் நாற்படியால் நன்னெறிவழியொழுகி நின் திருவடிக்கண் நீங்காப் பற்றுவைத்துள்ள மெய்யன்பரனைவரும் நின்திருவடிப் பேரின்ப நுகர்ந்து திளைக்க அடியேன் மட்டும் பிறவித் துன்பத்தினின்றும் நீங்காமல் வருந்துவது நின்திருவருட்கு அழகாமோ? திருவாய் மலர்ந்தருள்வாயாக. (செவ்வி வருதல் வேண்டு மென்பதாம்.)

(254)
 
சந்ததமும் நின்கருணை சாற்றுவதல் லால்வேறு
சிந்தைஅறி யேன்உன்றன் சித்தம் பராபரமே.
     (பொ - ள்) எக்காலத்திலும் தேவரீருடைய பெருந்தண்ணளியாங் கருணையினை உள்ளன்புடன் தெள்ளத் தெளிய எடுத்துப் புகழ்ந்து மொழிவதெல்லாமல் வேறு நாட்டம் ஏதும் அடியேன் அறியேன். சந்ததமும் - எப்பொழுதும். நாட்டம் - சிந்தை.

(255)
 
நான்நான் எனக்குளறும் நாட்டத்தால் என்னைவிட்டுப்
போனாலும் உன்னைவிட்டுப் போகேன் பராபரமே.
     (பொ - ள்) திருவருளை நினையாது எனக்கே உரிமையும் முதன்மையும் ஏறட்டுக்கொண்டு நான், நான் எனக் குளறிக்கொண்டு திரியும் நாட்டத்தால் தேவரீர் அடியேனைக் கைவிட்டுத் தொலைவில் நின்றாலும், அடியேன் நின் திருவடியை விட்டுப்போகேன்; நீயே எளியேனுக்கு நீங்காப் புகலிடம்.

(256)
 
இக்காயம் பொய்யென்றோர் ஈட்டத் துனக்கபயம்
புக்காதார் உண்டோ புகலாய் பராபரமே.
     (பொ - ள்) நிலம் முதலாகச் சொல்லப்படும் ஐம்பூதக் கூட்டரவால் திருவருளால் படைக்கப்பட்ட இவ்வுடம்பு நிலையில்லாதது என்னும் உண்மையினை உணர்ந்த மெய்யடியார் திருக்கூட்டத்துள் நின்திருவடிக்கு