அடைக்கலமெனப் புகல் புகாதாரும் உண்டோ? (ஒருவரும் இலர் என்பதாம்) திருவாய் மலர்ந்தருள்வாயாக; காயம் - உடம்பு, பொய். பொய் -நிலையில்லாதது.
(257)
தானாதல் பூரணமே சாருமிடம் உண்டுயிரும் | வானாதி யும்ஒழுங்காய் மன்னும் பராபரமே. |
(பொ - ள்) ஆருயிர்களினிடத்தும், வான முதலாகச் சொல்லப்படும் பூதங்களினிடத்தும் நீக்கமற நிறைந்து நிற்கும் முழுப்பரப்பே, அவை ஒழுங்காய்ச் சார்ந்து நிற்பகற்காம் நிலைக்களமே, நின்திருவடியே அடியேன் நிலையாகத் தங்குமிடமாக வுள்ளது.
(258)
உன்னுமனங் கர்ப்பூர வுண்டைபோ லேகரைய | மின்னும்ஆ னந்த விளக்கே பராபரமே. |
(பொ - ள்) திருவருளால் நின் திருவடியினையே இடையறா தெண்ணும் மனங் கருப்பூரக்கட்டி போன்றதாகும். அக் கட்டி நின்திருவடித் தழால் ஒளிவிட்டு விளங்குதற்குரிய மிகுந்த திருவருள் ஒளியாகத் திகழும் பேரின்பப் பெருவிளக்கே.
(259)
நாட்பட் டலைந்த நடுக்கமெலாந் தீரவுனக் | காட்பட்டுந் துன்பம்எனக் காமோ பராபரமே. |
(பொ - ள்) பொழுது போக்கிப் புறக்கணித்து அலைந்த நெடு நாளெல்லாம் துன்பத்தால் நடுங்கினேன்; (அது தீரத்) திருவருளால் நின்திருவடிக்கு அடிமையாயினேன்; அடிமையாகியும் அந் நடுக்கம் அடியேனை விட்டு நீங்காமலிருப்பது நின்திருவருளுக்கு ஏற்பதாகுமோ? (ஆகாதென்பதாம்.)
(260)
பாவிபடுங் கண்கலக்கம் பார்த்துமிரங் காதிருந்தால் | ஆவிக் குறுதுணையார் ஐயா பராபரமே. |
(பொ - ள்) ஐயனே! கொடிய பாவியாகிய யான் பொறுக்க முடியாது படுங் கண்கலக்கத்தைத் தேவரீர் கண்டுவைத்தும் திருவுள்ளம் இரங்காதிருந்தால், அடியேன் உயிருக்கு உறுதுணையாக நிற்பார் யாவருளர்? (ஒருவரும் இலர் என்பதாம்)
(261)
நின்னிறைவே தாரகமாய் நின்றுசுகம் எய்தாமல் | என்னிறைவே பாவித்தேன் என்னே பராபரமே. |
(பொ - ள்) யாண்டும் நீக்கமற நிறைந்து நிற்கும் நின்திருவடியின் அகல் நிறைவின்கண் அடங்கும் நிறைவே அடியேனுக்குரிய நிலைக்கள நிறைவென எண்ணாது, யான் தங்கிநிற்கும் இவ்வுடலின் நிறைவே எளியேன் நிறைவாம் எனப் பிழைபட எண்ணி நின் பெரு நிறைவிற் சார்ந்து பேரின்பம் நுகராது ஐயோ பிழைத்தேன். அகல் நிறைவு - கடவுளின் சர்வ வியாபகம். அடங்கு நிறைவு - ஆருயிர்கள் கடவுள்தம் அகல் நிறைவில் அடங்கி நிற்கும் வியாப்பியம். பாவித்தல் - நினைத்தல்.
(262)