நின்னைச் சரண்புகுந்தால் நீகாக்கல் வேண்டுமல்லால் | என்னைப் புறம்விடுதல் என்னே பராபரமே. |
(பொ - ள்) நின்திருவடியே மாறாது நிலைத்த புகலிடமென்று அடியேன் உறுதியாகக்கொண்டு அடைக்கலம் புகுந்தால், புகுந்த எளியேனைக் காத்தருள வேண்டிய நீ ஏற்றருளாது வெளியே தள்ளியிடுதல் அருண்முறையாமோ? (ஆகாதென்க.)
(263)
மாறாத துன்பமெல்லாம் வந்துரைத்தால் நின்செவியில் | ஏறாத வாறேது இயம்பாய் பராபரமே. |
(பொ - ள்) அடியேனைவிட்டு நீங்காத துன்பமெலாம் நின்திருவடிக்கண் வந்து எளியேன் விண்ணப்பித்துக் கொண்டால் அவ் விண்ணப்பம் நின் திருச்செவிக்கண் ஏறாதிருப்பது என்னையோ? திருவாய் மலர்ந்தருள்வாயாக.
(264)
விஞ்சுபுலப் பாடனைத்தும் வீறுதுன்பஞ் செய்யவந்த | அஞ்சுபுல வேடருக்கு ஆற்றேன் பராபரமே. |
(பொ - ள்) மேலாம் நின்திருவடி யுணர்வுக ளனைத்தினையும் கைகூட வொட்டாது பெருத்த துன்பமாக்கும் இயல்பு வாய்ந்த ஐம்புலவேடருக்கு அடியேன் ஆற்றுதல் செய்யேன். (நின்திருவருளால் அப் புலன்கள் அடங்குதல்வேண்டும் என்பதாம்.)
(265)
கன்னங் கரியநிறக் காமாதி ராட்சசப் பேய்க் | கென்னையிலக் காகவைத்த தென்னே பராபரமே. |
(பொ - ள்) மிக இருண்ட கரிய நிறத்தினையுடைய காமம் முதலாகச் சொல்லப்படும் அறுவகைக் குற்றங்களாகிய இராக்கதப் பேய்க்கு அடியேனைக் குறியாக வைத்தருளியது என்ன முறையோ?
(வி - ம்.) ஆறு குற்றங்களும் பகைஇனம் எனப்படும். அவை காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம்1 என்பன. இவற்றை இடையறாத் திருவடி நினைவால் எவர்க்கும் தடைசெய்தல் கூடும். கற்பிக்கும் இடமாகிய கல்லூரியின்கண் கல்லாது களித்துக் காலம் போக்குதற்கு அக் கல்லூரி இடமன்று. ஆனால் மாணவர் சிலர் அங்ஙனம் காலங்கழிப்பது அவர்தம் குற்றமேயாம். அதுபோன்று நன்மைக்குரிய உலகியற் பொருள்களை ஆசைப்பாட்டால் தீமைக்குரியனவாக்குதல் உயிர்களின் குற்றமேயாம். குற்றங்களாறும் வருமாறு:
| "செருக்குஞ் சினமும் சிறுமையு மில்லார் |
| பெருக்கம் பெருமித நீர்த்து." |
| - திருக்குறள், 431. |
| "இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா |
| உவகையும் ஏதம் இறைக்கு." |
| 432. |
(266)
1. | 'அகனமர்ந்த'. 1. 132 - 6. |