(பொ - ள்.) நுணுகி ஆய்ந்து காணுமிடத்து நீரினிடத்துக் காற்றாலுண்டாகும் குமிழினுக்குப் பூண்கட்டப்பட்டு நின்றாலும் இவ்வுடம்பாகிய மெய் நில்லாது. இத்தகைய நிலையில்லாத இவ்வுடலின்மேல் எளியேனுக்குப் பற்றறுவ தெந்நாளோ?
(2)
காக்கைநரி செந்நாய் கழுகொருநாள் கூடியுண்டு | தேக்குவிருந் தாம்உடலைச் சீஎன்ப தெந்நாளோ. |
(பொ - ள்.) காகம், நரி, செந்நாய், கழுகு ஆகிய இவை இடுகாட்டில் விருப்பொடு ஒருநாள் கூடியிருந்து நன்றாகத்தின்று ஏப்பமிடுதற்குரிய விருந்தாகுகின்ற இவ்வுடலை வெறுத்தொதுக்கிச் சீயென்று தள்ளுவது எந்நாளோ?
(3)
செங்கிருமி யாதி செனித்தசென்ம பூமியினை | இங்கெனுட லென்னும் இழுக்கொழிவ தெந்நாளோ. |
(பொ - ள்.) சிவந்த புழுக்கள் முதலியன பிறப்பதற்கு ஏதுவாக இருப்பதனால் அதற்குரிய பிறப்பிடமென்று சொல்லப்படும் இவ்வுடம்பினை அடியேன் என்னுடலென்று எக்களிப்புடன் சொல்லித் திரியும் பெருங்குற்றம் என்னைவிட்டு நீங்குவது எந்நாளோ?
(4)
தத்துவர்தொண் ணூற்றறுவர் தாமாய்வாழ் இந்நாட்டைப் | பித்தன்நான் என்னும் பிதற்றொழிவ தெந்நாளோ. |
(பொ - ள்.) மாயா காரியமாகக் காணப்படும் மெய்கள் எனப்படும் தத்துவங்கள் முப்பத்தாறும், இவற்றின் விரிவாகிய மெய்யாக்கம் அறுபதும் ஆகத் தொண்ணூற்று அறுவர்களும், இருவினைக் கீடாகத் தாமாகவே வந்து பொருந்தி வாழ்ந்திருத்தற்கு இடமாயுள்ள இவ்வுடலாகிய நாட்டினை அறிவு திரிதலாகிய பித்த மயக்கத்தால் நான் என்று பிதற்றுதலை ஒழிவது எந்நாளோ? மெய்யாக்கம் - தாத்துவிகம்.
(5)
ஊனொன்றி நாதன் உணர்த்தும்அதை விட்டறிவேன் | நானென்ற பாவிதலை நாணுநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) விழுமிய முழுமுதற் றலைவனாம் சிவபெருமான் அடியேன் உயிருக்குயிராய் உடன் நெஞ்சகத்தினின்று உணர்த்தியருளுவதனையே அடியேன் உணர்ந்து வருகின்ற உண்மையினை முற்றாக மறந்து யானே அறிவனென்று அறியாமையான் நினைந்து செருக்கும் பாவியாகிய அடியேன் தலைகுனிந்து நாணுவ தெந்நாளோ?
(6)
வேலையிலா வேதன் விதித்தஇந்த்ர சாலவுடல் | மாலைவியா பார மயக்கொழிவ தெந்நாளோ. |
(பொ - ள்.) படைத்தற் றொழிலை யல்லாது வேறுதொழிலொன்று மில்லாத படைப்போனாகிய நான்முகன் படைத்த, தோன்றி மறையுந் தன்மை வாய்ந்த இந்த உடல் மாலைக் காலத்து மயக்கும்