பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

626
    (பொ - ள்.) ஆங்காரமென்று சொல்லப்படும் பெரிய மதயானையின் வாயில் அகப்பட்ட மெல்லிய இனிய கரும்பையொத்து அடியேன் நைந்து துன்புறாமல் எந்தையாகிய சிவபெருமானின் திருவருளை அணையுநாள் எந்நாளோ?

(9)
சித்தமெனும் பௌவத் திரைக்கடலில் வாழ்துரும்பாய்
நித்தமலை யாதருளில் நிற்குநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) மனத்தின் ஒருநிலையாகிய சித்தமென்று சொல்லப்படும் நுரையும், அலையும் கூடிற பெருங்கடலில் அகப்பட்ட சிறுதுரும்பு போன்று எந்நாளும் அலைந்து திரியாமல் திருவருளின் நீங்கா நிலையில் நிற்குநாள் எந்நாளோ?

(10)
வித்தியா தத்துவங்கள் ஏழும் வெருண்டோடச்
சுத்தபர போகத்தைத் துய்க்குநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) வித்தியா தத்துவங்களென்று சொல்லப்படும், மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் ஆகிய மெய்கள் ஏழும் அஞ்சியகலத் தூய சிவநுகர்வினைத் துய்க்கு நாள் எந்நாளோ? மருள், ஊழி, ஊழ், உழைப்பு, உணர்வு, உகப்பு, ஆள் எனத் தூவா மாயை மெய் ஏழு எனவுங் கூறுப.

(11)
சுத்தவித்தை யேமுதலாத் தோன்றுமோர் ஐந்துவகைத்
தத்துவத்தை நீங்கிஅருள் சாருநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) சுத்தவித்தை முதலாகத் தோன்றும், சுத்தவித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி, சிவம் என்னும் ஐவகைத் தத்துவங்களையும் திருவருளால் கடந்து நல்ல சிவபெருமானின் திருவடியினைச் சாரு நாள் எந்நாளோ? இம் மெய்கள் ஐந்தும் தோன்றும் மாயை தூமாயை எனப்படும். இவ்வைந்தும் முறையே ஆசான், ஆண்டான், அருளோன், அன்னை, அத்தன் எனவும் வழங்குப.

(12)
பொல்லாத காமப் புலைத்தொழிலில் என்னறிவு
செல்லாமல் நன்னெறியிற் சேருநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) தீமை விளைவதற்கு ஏதுவாகிய பேராசையாம் புலைத்தொழிலின்கண்ணே எளியேனுடைய அறிவு சென்றுவிடாமல் திருவருளால் நன்னெறியிற் சேருநாள் எந்நாளோ!

(13)
அடிகளடிக் கீழ்க்குடியாய் யாம்வாழா வண்ணங்
குடிகெடுக்கும் பாழ்மடிமைக் கூறொழிவ தெந்நாளோ.
    (பொ - ள்.) சிவபெருமான் திருவடியின்கீழ்க் குடியாக என்றும் பொன்றாது வாழாதபடி ஏழையேன் குடியினைக் கெடுக்கும் பாழான சோம்பல் 1 தன்மையினை விட்டு நீங்குவது எந்நாளோ? மடி - சோம்பல்.

(14)
 1. 
'நெடுநீர்,' திருக்குறள், 605.