பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

640
    (பொ - ள்.) திருவருளால் உள்ளத்தினுள்ளே உணர்வின் கணூறும் சிவப் பேரின்ப முற்றும் திளைத்து அடியேன் நெடுநாளாக எய்த வேண்டுமெனக் கொண்டுள்ள வேணவாவாகிய விடாய் நீங்கும் நாள் எந்நாளோ? விடாய் - விருப்பம்; தாகம்.

(9)
கன்னலுடன் முக்கனியுங் கற்கண்டுஞ் சீனியுமாய்
மன்னும்இன்ப ஆரமுதை வாய்மடுப்ப தெந்நாளோ.
    (பொ - ள்.) கரும்பின் பிழிவுடன், வாழை மா பலா என்னும் முக்கனியும், கற்கண்டும், சீனியுமாய்க் கலந்து நிலைபெற்றது போன்றுள்ள திருவடிப் பேரின்ப அரிய அமிழ்தினைத் திருவருளால் வாய் மடுத்துண்ணுநாள் எந்நாளோ?

(10)
மண்ணூ டுழன்ற மயக்கமெல்லாந் தீர்ந்திடவும்
விண்ணூ டெழுந்தசுகம் மேவுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) இவ்வுலக மயக்கத்தால் ஓவாதலைந்து திரிந்து எய்திய அல்லலெலாம் தீரும்பொருட்டுத் திருவருட் பெருவெளியாம் தில்லைத் திருச்சிற்றம்பலத்தின்கண் இடையறாது நடிக்கும் திருக்கூத்தின் பேரின்பத்தினைப் பொருந்துநாள் எந்நாளோ?

(11)
கானற் சலம்போன்ற கட்டுழலைப் பொய்தீர
வானமுத வாவி மருவுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) இன்புள்ளது போற்றோன்றி இளைக்கும் இவ்வுலக இன்பத்திற்கொப்பு கானல்நீராகும். அது போன்ற பிறவிக்கட்டிற் குட்பட்டு உழன்று திரியும் நிலையாதவற்றை நிலைக்கும் என்று எண்ணும் பொய்கள் தீரத் திருவடிப் பேரின்பமாகிய வற்றாப் பெருநீர் நிலையில் முழுகுவது எந்நாளோ? வாவி - நீர்நிலை; குளம்.

(12)
தீங்கரும்பென் றால்இனியா தின்றால் இனிப்பனபோல்
பாங்குறும்பே ரின்பம் படைக்குநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) இனிய கரும்பென்று வாயினாற் சொல்லுவதனால் மட்டும் உண்ணும் சுவைஇனிமை உண்டாக மாட்டாது; அதனை மென்று தின்றால் மட்டுமே சுவை யுண்டாகும். அது போன்று நின் திருவடிப் பேரின்ப நுகர்வினை நூலுணர்வால் வாயினாற் சொல்லி விடுவதால் இன்பம் உண்டாவதற்கில்லை. நுண்ணுணர்வாகிய அனுபவத்திலுண்டாகும்படி நீ தந்தருள்வது எந்நாளோ?

(13)
புண்ணியபா வங்கள் பொருந்தாமெய் யன்பரெல்லாம்
நண்ணியபே ரின்பசுகம் நானணைவ தெந்நாளோ.
    (பொ - ள்.) புண்ணிய பாவங்கள் என்று சொல்லப்படும் நல்வினை தீவினைகளுக்கு ஏதுவாகிய இன்பத்துன்பங்களை அடையாது, விருப்பு வெறுப்புகளின்றி இறையன்புடன் வாழ்வதாகிய இருவினை யொப்பு வாய்ந்த மெய்யடியார்கள் அனைவர்களும் திருவருளால் பொருந்திய பேரின்ப நலத்தினை அடியேங்கள் பெறுவது எந்நாளோ?

(14)