உகந்தானுக்கு அடியேனுடைய நெஞ்சத்தைத் திறையாகக் கொடுத்து வழிபடுநாள் எந்நாளோ? திறை - கப்பம்.
(5)
கள்ளனிவன் என்றுமெள்ளக் கைவிடுதல் காரியமோ | வள்ளலே என்று வருந்துநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) உலகின்கண்ணே மெய்யுணர்வுடையார் போன்று நடித்துத் திரியும் கள்வன் இவன் என்றுகூறி புறக்கணித்துக் கைவிட்டு விடுவது காரியமல்ல வென்று வள்ளலே நின் திருவடியின்கண் முறையிட்டு வருந்துநாள் எந்நாளோ?
(6)
விண்ணாடர் காணா விமலா பரஞ்சோதி | அண்ணாவா வாவென் றரற்றுநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) தெய்வ வுலகத்திலுள்ள தேவர்களாலும் காண முடியாத, இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய, பேரருட் பெருஞ் சுடரே! எந்தையே! எனப் பலகால் முறையிட்டு அரற்றுவது எந்நாளோ?
(7)
ஏதேது செய்தாலும் என்பணிபோய் நின்பணியாம் | மாதேவா என்று வருந்துநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) அடியேன் எவ்வகைத் தொழிலைச் செய்யினும் அச்செயல் நின் அடிமையாம் நிலைமையில் எளியேனாற் செய்யப்படின் அது நின் செயலேயாம். பெருந்தேவனே என்று மெய்ம்மையாக அவ் வெண்ணம்வர வருந்துநாள் எந்நாளோ?
(8)
பண்டுங்கா ணேன்நான் பழம்பொருளே இன்றும்உனைக் | கண்டுங்கா ணேன்எனவுங் கைகுவிப்ப தெந்நாளோ. |
(பொ - ள்.) கட்டுற்று உடலோடுகூடி உழலும் முற்காலத்திலும் ஆணவ மலத்தடையால் நின்னுடைய நீங்கா நிலையாம் பழஞ் சிறப்பினை உணர்ந்திலேன். தடையகன்று நின் திருவடியை அடைந்துள்ள இந்நாளிலும் எளியேன் கண்டிலேன். இங்ஙனம் முறையிட்டுக் கைகுவித்து வணங்குநாள் எந்நாளோ?
(பொ - ள்.) காணப்படும் பொருட்கு வேறாய் நின்று காண்பதே காட்சி யெனப்படும். அப் பொருளுடன் வேறறப் புணர்ந்து அதற்கடிமையாய்த் தன்னை யிழந்து அப் பொருளின்பத்தின்கண் அழுந்தி யறிதலாகிய நிலையில் நிற்குங்கால் அப் பொருளைக் காணாது 1 பொருளின்பநுகர்வாகவே நிற்கும். அதனால் அஞ்ஞான்றும் காண்பதற்கில்லை. நறுமணமலரை மூக்கால் மணமும் கண்ணால் உருவமும் காண்கின்றோம். ஆனால் கைக்கொண்டு முடியின்கண் வைத்து முடித்தக்கால் அம் முடியும் பூவும் வேறின்றி மணமாகவே மூடிநிற்கும். அம் மணம் முடியினின்று வெளிப்படுதல் போல், நல்லசிவன் சிறப்பியல்பு நாயன் மார்பால் நேயமுறத் தோன்றும். இதுவே மேலதற்கொப்பாம். அழுந்தியறிதல் - அனுபவித்தல்.
(9)
1. | 'அன்றுந்'. 11. காரைக்காலம்மை, அற்புத - 61. |