பொங்கேத மான புழுக்கமெலாந் தீரஇன்பம் | எங்கேஎங் கேஎன் றிரங்குநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) மிகுதியான குற்றம் பொருந்திய மனத்துன்ப முற்றும் நீங்கிச் சிவப்பேரின்பம் எங்கே எங்கே கிடைக்கும் என்று மனமிரங்கி வருந்துநாள் எந்நாளோ?
(10)
கடலின்மடை கண்டதுபோற் கண்ணீ ராறாக | உடல்வெதும்பி மூர்ச்சித் துருகுநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) பெருங்கடல்நீர் மடைதிறந்து பெருக்கெடுத்தது என்று சொல்லும்படி அடியேனுடைய தேட்டத்தால் எழுங் கண்ணீரானது ஆறுபோற் பெருகியோட, உடம்பானது வெதும்பி உயிர்ப்படங்கி மனமுருகுநாள் எந்நாளோ?
(11)
புலர்ந்தேன் முகஞ்சருகாய்ப் போனேன்நிற் காண | அலந்தேன்என் றேங்கி அழுங்குநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) முகம் வாடினேன்; உடம்பும் சருகுபோல் வாடிற்று; நின் திருவடியைக் காணவேண்டுமென்று பெருவேட்கையுற்று ஏங்கி வருந்துநாள் எந்நாளோ?
(12)
புண்ணீர்மை யாளர் புலம்புமா போற்புலம்பிக் | கண்ணீருங் கம்பலையுங் காட்டுநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) கொடிய புண் எய்தியவர்கள் பொறுக்க முடியாது வருந்திப் புலம்புவது போன்று அடியேனும் நின் திருவடிப் பேற்றின்ப மெய்தாது வருந்திக் கண்ணீர்ப் பெருக்கமும், மெய்ந்நடுக்கமும் நின் திருமுன் எளியேனுக்கு ஏற்படுநாள் எந்நாளோ?
(13)
போற்றேனென் றாலும்என்னைப் புந்திசெயும் வேதனைக்கிங் | காற்றேன்ஆற் றேனென் றாற்றுநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) அடியேன் இதுகாறும் போற்றிமந்திரம் புகன்று பூத்தூவி வழிபாடு செய்திலன்; ஆயினும், எளியேனுடைய இருவினைக்கீடாக வருத்தும் புத்தியெனுங் கருவியின் துன்பத்திற் காற்றுதல் செய்யேன்; ஆற்றுதல் செய்யேன் என்று வருந்திப் புலம்புநாள் எந்நாளோ? புந்தி - புத்தி.
(14)
பொய்ம்முடங்கும் பூமிசில போட்டலறப் பூங்கமலன் | கைம்முடங்க நான்சனனக் கட்டறுவ தெந்நாளோ. |
(பொ - ள்.) காரணத்தினின்றுங் கட்புலனாகக் கடவுளருளால் காரியப்படும் இவ்வுலகம் அக் காரணத்தின்கண் ஒடுங்கும், தன்மையால் நிலையுள்ளதாகாது. அதனால் அதனைப் பொய்உலகு என்ப; இத்தகைய உலகின்கண், எளியேனை வினைக்கீடாகப் பிறப்பிக்கும் தாமரை இருக்கையோனாகிய படைப்போன் பிறப்பித்தலைச் செய்யாது கை