பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

645
    (பொ - ள்.) துன்பத்திற் கேதுவாகிய மூலப்பகுதி மாயையிற் றோன்றும் முக்குணமும் நீங்கிச் சிவத்தின் எண்குணஞ் சேர்ந்த சிவனடியார் தேடவேண்டுமென்று காதலால் தேடுகின்ற சிவ மெய்ப் பொருளினை அடியேன் அடையுநாள் எந்நாளோ? கோட்டாலை - துன்பம்.

(3)
கெடுத்தே பசுத்துவத்தைக் கேடிலா ஆனந்தம்
அடுத்தோ ரடுத்தபொருட் கார்வம்வைப்ப தெந்நாளோ.
    (பொ - ள்.) பிணிப்புத் தன்மையாம் பசுத்துவத்தை அழித்து, அழிவில்லாத திருவடிப் பேரின்பத்தினைத் திருவருளால் கைவரப் பெற்றோர் அடைந்ததாகிய நல்லசிவன் நற்றாளை யடைதற் பொருட்டு அதனிடத்துப் பேரன்பு கொள்ளுநாள் எந்நாளோ? பசுத்துவம் - பசுத்தன்மை; மலப் பிணிப்போடிருத்தல்.

(4)
கற்கண்டால் ஓடுகின்ற காக்கைபோல் பொய்ம்மாயச்
சொற்கண்டால் ஓடும்அன்பர் தோய்வறிவ தெந்நாளோ.
    (பொ - ள்.) ஆயிரக்கணக்கான காக்கைகள் ஒன்று கூடியிருப்பினும் ஒருகல்லைக் கண்ட மாத்திரத்தில் விரைந்து பறந்து போய் மறையும் தன்மைபோல், மாயாகாரியமான உலகியற் பற்றுக்குரிய சொற்களைக் கேட்ட மாத்திரத்தில் அஞ்சி அகன்றோடும் செம்பொருட்டுணிவினர் சார்பினைக் கூடுவ தெந்நாளோ?

(5)
மெய்த்தகுலங் கல்விபுனை வேடமெலாம் ஓடவிட்ட
சித்தரொன்றுஞ் சேராச் செயலறிவ தெந்நாளோ.
    (பொ - ள்.) உடம்புபற்றித் தோன்றும் குலநலமும், உணர்வு பற்றித் தோன்றும் கல்வி நலமும், பூணும் ஆடையணி முதலிய கோல நலமும் சிறிதும் பொருந்தாமல் ஓடவிட்ட திருவடிச்சித்தர் ஒன்றிலும் சேராது தனித்துத் திருவடிச் செயலாய் நிற்கும் செயலறிவ தெந்நாளோ?

(6)
குற்றச் சமயக் குறும்படர்ந்து தற்போதம்
அற்றவர்கட் கற்றபொருட் கன்புவைப்ப தெந்நாளோ.
    (பொ - ள்.) மீண்டும் மீண்டும் பிறப்புக் கேதுவாகிய குற்றத்தினைப் புரியத் துணைநிற்கும் முக்கூற்றுப் புறச்சமயக் கெடுதிகளைக் கெடுத்து உலகியல் முனைப்பு அற்றவர்கட்கு உறுதியாக நிற்கும் மெய்ப்பொருட்கு நிறைந்த அன்புவைப்ப தெந்நாளோ?

(7)
தர்க்கமிட்டுப் பாழாஞ் சமயக் குதர்க்கம்விட்டு
நிற்குமவர் கண்டவழி நேர்பெறுவ தெந்நாளோ.
    (பொ - ள்.) வீணாகத் தர்க்கமிட்டுப் பாழாகின்ற உண்மையறிவில்லாத சமயக் சழக்குகளை விட்டொழித்துத் திருவருளால் நிற்கு நல்லார் கண்ட நன்னெறியினைக் கைக் கொண்டொழுகுநாள் எந்நாளோ? குதர்க்கம் - சழக்கு.

(8)