பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

646
வீறியவே தாந்தமுதல் மிக்க கலாந்தம்வரை
ஆறுமுணர்ந் தோருணர்வுக் கன்புவைப்ப தெந்நாளோ.
    (பொ - ள்.) மேலாகிய வேதாந்த முதல் சிறப்பு மிகுந்த கலாந்தம்வரை ஆறு அந்தங்களையும் திருவருளாலுணர்ந்தவர்களுடைய சிவ வுணர்ச்சியின் பொருட்டு அன்புவைப்பது எந்நாளோ?

    (வி - ம்.) ஆறந்தம் : 1. வேதாந்தம், 2. சித்தாந்தம், 3. நாதாந்தம், 4. போதாந்தம், 5. யோகாந்தம், 6. கலாந்தம்.

    இவ்வுண்மை வருமாறு :

"வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்
 நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
 ஓதத் தகுமெட் டியோகாந்த அந்தமும்
 ஆதிக்க லாந்தமும் ஆறந்த மாமே"
- 10. 2329.
(9)
கண்டஇட மெல்லாங் கடவுள்மயம் என்றறிந்து
கொண்டநெஞ்சர் நேயநெஞ்சிற் கொண்டிருப்ப தெந்நாளோ.
    (பொ - ள்.) பேரன்பாம் காதன் மேலீட்டால் பார்த்த இடமெல்லாம் சிவமயமே என்றறிந்துகொண்ட நல்ல மனத்தினையுடையவரது சிவநேசத்தை அடியேன் உள்ளத்தின்கண் நீங்காது கொண்டிருப்ப தெந்நாளோ?

(10)
பாக்கியங்க ளெல்லாம் பழுத்து மனம்பழுத்தோர்
நோக்குந் திருக்கூத்தை நோக்குநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) திருவடிப் பயிற்சிப் பயனாம் நுகர்வுணர்வால் ஏற்படும் பேரின்பப் பேறுகளனைத்தும் நுகர்ந்து மனம் அடங்கியவர் திருவருளால் கண்டு கும்பிடும் திருச்சிற்றம்பலத்தின்கண் நிகழும் மூதறிவுத் திருக்கூத்தினை அடியேன் கண்டு கும்பிடுநாள் எந்நாளோ?

    (வி - ம்.) பாக்கியம் - பேறு. பழுத்து - நுகர்ந்து; அனுபவித்து. பழுத்தோர் - அனுபவித்தோர்; அனுபூதிமான்கள்,

(11)
எவ்வுயிருந் தன்னுயிர்போல் எண்ணுந் தபோதனர்கள்
செவ்வறிவை நாடிமிகச் சிந்தைவைப்ப தெந்நாளோ.
    (பொ - ள்.) எத்தகைய சிற்றுயிரினையும் தன்னுயிர்போல் நினைக்கின்ற நன்னெறிச் செல்வர்களாகிய தவத்தினர்கள்தம் நல்ல அறிவினை விரும்பி அதன் பொருட்டு மிகுந்த சிந்தை வைப்பது எந்நாளோ? நல்ல அறிவு - மூதறிவு; சிவஞானம்.

(12)
இருநிலனாய்த் தீயாகி என்றதிருப் பாட்டின்
பெருநிலையைக் கண்டணைந்து பேச்சறுவ தெந்நாளோ.
    (பொ - ள்.) நன்னெறி முதல்வர் நால்வருள் ஒருவராம் "நாவரசர்" பெருமானார் பாடியருளிய "இருநிலனாய்த் தீயாகி" என்ற