(பொ - ள்.) மூதறிவாம் சிவபெருமானின் திருவடியுணர்வே மாறாநிலை யறிவெனப்படும். அவ்வறிவைத் திருவருளால் அறிவதுவே ஆகும் பொருளென்று உறுதி மொழிந்த உண்மையினை யோர்ந்து அவ்வழி நிற்கும் நாள் எந்நாளோ?
(வி - ம்.) திருவருணையின்கண் முருகக் கடவுள் திருவருட்பேறு பெற்றெழுந்தருளிய அருணகிரிநாதர் திருவாய் மலர்ந்தருளிய திருப்புகழில் "அறிவை யறிவது பொருளென" அருளிச் செய்யப்பட்டது காண்க.
பண்ணின் இசைப்போலப் பரமன்பால் நின்றதிறன் | எண்ணி அருளாகி இருக்குநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) (ஏழிசையின் கூட்டமாகிய பண்ணும் அவற்றின் நுண்மையாகிய இசையும் உடலும் உயிரும் போன்று பிரிக்கப்படா ஒற்றுமையுடையன.) பண்ணும் அதனின் வேறன்றா யெண்ணப்படும் ஓசையும் போல முதல்வனிடத்துப் புணர்ப்பாய் இருந்த திரத்தினை எண்ணித் திருவருள் வடிவா யிருக்குநா ளெந்நாளோ? புணர்ப்பு - அத்துவிதம்.
(1)
அறிவோ டறியாமை அற்றறிவி னூடே | குறியி லறிவுவந்து கூடுநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) திருவருளால் அறிதலும் அறியாமையுமாகிய 1 பாச ஞானத்தினின்று நீங்கி அடியேன் அறிவினிடத்தே வழிபடுங் குறியாக முதல்வனையறியும் பதியறிவு வந்து சேரும்நாள் எந்நாளோ?
(2)
சொல்லால் மனத்தால் தொடராச்சம் பூரணத்தில் | நில்லா நிலையாய் நிலைநிற்ப தெந்நாளோ. |
(பொ - ள்.) தூமாயையின் காரிய ஒலிகளாகிய சொல்லினாலும், பகுதிமாயையின் காரியமாகிய மனத்தினாலும் எட்டவொண்ணாத முழு நிறைவாம் திருவருள் நிலையினில் தலைமையொடு நில்லாது திருவருட்கு அடிமையாம் நிலைமையில் அடியேன் நிலைநிற்பது எந்நாளோ?
(3)
செங்கதிரின் முன்மதியந் தேசடங்கி நின்றிடல்போல் | அங்கணனார் தாளில் அடங்குநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) செவ்விய கதிரோனாகிய ஞாயிற்றின் முன்னிலையில் மதியமாகிய திங்கள் தன்னுருவங் கெடாமல் தன்னொளி மட்டும் மழுங்கி யிருப்பது போன்று அடியேனும் சிவபெருமானார் திருவடியில் பசுத்தன்மை நீங்கி அடிமைத் தன்மை எய்தி என்நிலை யழியாது 2 தாடலை போல் அடங்கி நிற்பது எந்நாளோ?
(4)
1. | 'அறியாமை.' சிவஞான சித்தியார், 8. 2 - 20. |
2. | 'நசித்தொன்றின்.' சிவஞான போதம், 11. 2 - 3. |