பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

651
வானூ டடங்கும் வளிபோல இன்புருவாங்
கோனூ டடங்குங் குறிப்பறிவ தெந்நாளோ.
    (பொ - ள்.) வானத்தின்கண் அத்துவிதப் புணர்ப்பா யடங்கும் காற்றினைப் போன்று பேரின்பப் பெருவடிவாம் முதல்வன்கண் அடியேன் அத்துவிதமாக அடங்குநாள் எந்நாளோ? வளி - காற்று.

(5)
செப்பரிய தண்கருணைச் சிற்சுகனார் பூரணத்தில்
அப்பினிடை உப்பாய் அணையுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) சொல்லுதற்கரிய குளிர்ந்த கருணையுடன் கூடிய பேரறிவுப் பேரின்ப வடிவினனாகிய சிவபெருமானாரின் எங்கும் நீக்க மற நிறைந்து நிற்கும் பெரு நிறைவில் நீரிடை நிறைந்த உப்புப் போன்று அடியேன் அணையும் நாள் எந்நாளோ?

    (வி - ம்.) உப்பு நீரினை யணைந்ததும் தன்சுவை முழுவதையும் நீருக்கு நல்கித் தன்னோடொப்ப வைக்கும். இதுபோல் சிவன் ஆருயிருடன் புணர்ந்ததும் தன் எண்குணங்களையும் அவ்வுயிர்க்குப் பதிவித்து ஒப்ப நிற்கச் செய்வான்.

(6)
தூய அறிவான சுகரூப சோதிதன்பால்
தீயில் இரும்பென்னத் திகழுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) தடையிலா ஞானமும், பேரின்பமும் பேரொளியும் உடைய தழல்வண்ணர் திருவடியில் திருவருளால் தீயடைந்த இரும்பு போன்று சிவ வண்ணமாய்த் திகழுநாள் எந்நாளோ?

    (வி - ம்.)தீயிரும்பைக் கெடுக்காது தன் வண்ணமாதற்கு இயைபில்லாத அவ்விரும்புடன் தோன்றி நிற்கும் கறைமாத்திரம் 1 அழியச் செய்யுமாறு போல் முதல்வனும் ஆருயிரைக் கெடுக்காது அவ்வுயிர்தன்னை வந்தணைதற்குத் தடையாயுள்ள பண்டே புல்லியமல ஆற்றலைக் கெடுத்துத் தன் பெருங்குணங்கள் எட்டினையும் பதிவித்துத் தன் வண்ணமாக்கிக் கொள்வன்.

(7)
தீதணையாக் கர்ப்பூர தீபமென நான்கண்ட
சோதியுட னொன்றித் துரிசறுவ தெந்நாளோ.
    (பொ - ள்.) கேடில்லாத கருப்பூரம் தீயை யணைந்ததும் அத் தீயுடன் தானும் கலந்து வேறுகாணப்படாது அவ்வொளி வண்ணமாய்க் காண நிற்பது போன்று, ஆருயிரும் திருவருளால் சிவத்துடன் கலந்ததும் தத்துவக் கூட்டங்களாலாகிய உடம்பு நீங்கப்பெற்று உயிர் திருவடிக்கீழ் மறைந்து சிவமாய்த் தோன்றும்.

(8)
ஆராருங் காணாத அற்புதனார் பொற்படிக்கீழ்
நீரார் நிழல்போல் நிலாவுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) மெய்யன்பு இல்லாத தேவர் முதலிய யாவரானுங் காணவொண்ணாத வியத்தகு சிவபெருமானின் அழகிய திருவடியின்

 1. 
'இரும்பைக்காந்தம்.' சிவஞான சித்தியார், 11, 2 - 5.