என்னை அறிய எனக்கறிவாய் நின்றருள்நின் | தன்னைஅறிந் தின்பநலஞ் சாரவைத்தால் ஆகாதோ. |
(பொ - ள்) (அடியேன்) ஆன்மாவாகிய என்னை அதன் உண்மைத் தன்மையினை யறிய எளியேனுக்கு அறிவாய் விளங்கிநின் றருளிய உன்னை யறிந்து பேரின்ப நலத்தினை எளியேன்பால் சேரவைத்தால் ஆகாதோ?
(2)
பொய்ம்மயமே யான புரைதீர எந்தைஇன்ப | மெய்ம்மயம்வந் தென்னை விழுங்கவைத்தால் ஆகாதோ. |
(பொ - ள்) வடிவம் வந்து எளியேனை விழுங்கி உன்னுள் ஒடுக்கிக் கொள்ளச் செய்தால் ஆகாதோ? புரை - குற்றம். விழுங்கல் - ஆட்கொள்ளல்.
(3)
மட்டில்லாச் சிற்சுகமாம் வாழ்வேநின் இன்பமயஞ் | சிட்டர்போல் யானருந்தித் தேக்கவைத்தால் ஆகாதோ. |
(பொ - ள்) அளவிடப்படாத மூதறிவுப் பேரின்பப் பெருவாழ்வே, நின்னுடைய திருவடிப் பேரின்ப இயல்பினை நின்மெய்யடியார்களைப் போன்று அடியேனும் நுகர்ந்து நிறையும்படி வைத்தருளினால் ஆகாதோ?
(4)
அத்தாநின் பொற்றா ளடிக்கே அனுதினமும் | பித்தாகி இன்பம் பெருகவைத்தால் ஆகாதோ. |
(பொ - ள்) ஐயனே! நின்னுடைய பொன்போலுந் திருவடிக்கீழ் எந்நாளும் அடியேனுக்கு மூதறிவுப் பித்துப்பெருகும்படி நின்திருவடிப் பேரின்பத்தினைப் பெருகவைத் தருளினால் ஆகாதோ?
(5)
மெல்லியலார் மோக விழற்கிறைப்பேன் ஐயாநின் | எல்லையில்ஆ னந்தநலம் இச்சித்தால் ஆகாதோ. |
(பொ - ள்) மென்மைத் தன்மை வாய்ந்த பெண்களுடைய பெருவேட்கையென்னும் விழற்புல்லினை வளர்த்தற்பொருட்டு அறிவாகிய நீரினை இறைக்கின்றவனாகிய யான் ஐயனே நின்னுடைய அளவில்லாத பேரின்பத்தினை விரும்பினால் ஆகாதோ? விழல் - ஒருவகைப்புல்.
(6)
சுட்டழகா யெண்ணுமனஞ் சூறையிட்டா னந்தமயக் | கட்டழகா நின்னைக் கலக்கவைத்தால் ஆகாதோ. |
(பொ - ள்) சுட்டியுணரப்படும் உலகியற் பொருள்களில் நன்றாக விரும்பும் விருப்பத்தைக் கொள்ளையடித்துப் பேரின்பப் பெருவடிவாய்த் திகழும் கட்டழகனே நின்திருவடியிற் கலந்து இன்புறுமாறு வைத்தால் ஆகாதோ?
(7)