பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


96


    பதின் ஆக்கம் என்பதும் தசகாரியம் என்பதும் ஒன்றே. அவை: மெய்வடிவம், மெய்க்காட்சி, மெய்யுண்மை, ஆவிவடிவம், ஆவிக்காட்சி, ஆவியுண்மை, சிவவடிவம், சிவக்காட்சி, சிவச்சேர்க்கை, சிவனடியின்பம் எனப் பத்தாம். இவற்றை முறையே தத்துவருபம், தத்துவதரிசனம், ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்மசுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் எனவுங் கூறுப. இவற்றின் விரிவுகளெல்லாம் மெய்கண்ட நூல்களுள் ஒன்றாகிய "உண்மை நெறி விளக்கத்திற்" காணலாம்.

    அத்துவிதம் என்னும் மெய்ப்புணர்ப்பின் உண்மையினை வருமாறுணர்க :

"ஒன்றன் றிரண்டன் றுளதன் றிலதன்று
 நன்றன்று தீதன்று நானென்று - நின்ற
 நிலையன்று நீயன்று நின்னறிவு மன்று
 தலையன் றடியன்று தான்."
- திருக்களிற்றுப்படியார், 58.
    ஆவியும் சிவமும் மேவிப்புணர்ந்து பிரிப்பின்றித் தாங்குநிறைவும் தங்குநிறைவுமாய் நிற்கும் நிலையினை உடன்பாட்டாலும் எதிர்மறையினாலும் எங்ஙனம் எடுத்துரைத்தல் கூடும்? எனவே சொல்லொண்ணாத தென்பதாம்.

    அருளோன் மெய்யாகிய சதாசிவ தத்துவத்தின்கண் தங்கும் ஆவிகள் ஆவிப்பால் என்றும் சிவப்பால் என்றும் இருபாலாராய் எண்ணப்படுவர். ஆவிப்பால் எனினும் அணுபக்கம் எனினும் ஒன்றே. சிவப்பால் எனினும் சம்புபக்கம் எனினும் ஒன்றே.

    அணுபக்கம் என்பது ஆவிகள் அருளால் செவ்வி எய்த முயன்று சிவனடிசாரு நெறி. சம்புபக்க மென்பது இறைவன் திருத்தச் செவ்விப்பட்டுச் சிவனடிசாரு நெறி. அணுபக்கத்தைக் காரியப் படுத்தப்படுவது எனவும் கீழ்எனவுங் கூறுப. சம்புபக்கத்தைக் காரியப்படுத்தப்படுங் கருவி யெனவும் மேல் எனவுங் கூறுப.

பேறு பெறமுயலும் பெற்றியரா விப்பாலார்
பேறுபெற் றார்சிவப்பா லார்.
(5)
கல்லாத அறிவுமேற் கோளாத கேள்வியுங்
    கருணைசிறி தேதுமில்லாக்
  காட்சியும் கொலைகளவு கட்காமம் மாட்சியாக்
    காதலித் திடுநெஞ்சமும்
பொல்லாத பொய்ம்மொழியும் அல்லாது நன்மைகள்
    பொருந்துகுணம் ஏதும்அறியேன்
  புருடர்வடி வானதே யல்லாது கனவிலும்
    புருடார்த்தம் ஏதுமில்லேன்